×

கங்குவா திரைப்படம் வெளியாவதில் புது சிக்கல்

 

20 கோடி ரூபாயை சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல வி.ஐ.பி.க்கள் பணத்தை கொடுத்து வைத்துள்ளனர். இவர், இந்த பணத்தை பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமும் அடைந்து விட்டார். இவரது சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர்  நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார். 
 
அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம், ஸ்டூடியோ கிரின் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 2013ம் ஆண்டு 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்க கோரியும், ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் படங்களை முடக்கம் செய்யக் கோரியும்  சொத்தாட்சியர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு,  கங்குவா படத்தை வெளியிடும் முன் ஒரு கோடி ரூபாயை சொத்தாச்சியரிடம் டிபாசிட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகேயன் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஒரு கோடி ரூபாயை இன்னும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தவில்லை என சொத்தாட்சியர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவதற்கு பணம் இல்லை என தெரிவிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம் தொடந்த வழக்கில் 100 கோடி ரூபாயை செலுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 20 கோடி ரூபாயை நவம்பர் 13ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பணத்தை செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.