×

புதிய நாடாளுமன்ற கட்டிட பாதுகாப்பில் பெரிய அளவில் குறைபாடு- கனிமொழி எம்.பி.

 

புதிய நாடாளுமன்ற கட்டிட அமைப்பு மற்றும் பாதுகாப்பில் பெரிய அளவில் குறைபாடு உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இருவரையும் பிடித்து நாடாளுமன்ற காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் பட்டாசுகளை வீசியது தெரியவந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி, “புதிய நாடாளுமன்ற கட்டிட அமைப்பே பாதுகாப்பு குறைபாடுடன் உள்ளதாக தெரிகிறது. அவைக்குள் எளிதாக ஊடுவருவக் கூடிய வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் இருக்கக் கூடிய அவையில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்றால் யார் தான் இதற்கு பொறுப்பு? அரசை எதிர்ப்போரை தேசவிரோதி என முத்திரை குத்தும் பாஜக, நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு பற்றி என்ன சொல்லப் போகிறது? நாடாளுமன்றத்திற்குள் மொபைல் போன் கொண்டு போக முடியாது. பலத்த பாதுகாப்பு வளையத்தை தாண்டி எப்படி வந்தார்கள்? பார்வையாளர் மாடத்திற்குள் வருவதற்கு யார் அனுமதி கொடுத்தது.

நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்ட சம்பவத்தின் போது நான் அங்கு தான் இருந்தேன். அவையில் அப்போது பூஜிய நேரம் நடந்துக் கொண்டிருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் தடுத்தார்கள், அதன் பிறகே காவலர்கள் அவர்களை பிடித்து சென்றனர். இது ஒரு கடுமையான பாதுகாப்பு மீறல் என்றே நான் நினைக்கிறேன், அவர்களால் எதை வேண்டுமானாலும் கொண்டு வந்திருக்க முடியும். யாரும் காயமடையவில்லை என்பதற்காக இதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது.” என்றார்.