×

ராகுல்காந்தி ஒரு காமெடியன்... இதுனால தான் பிரதமர் மணிப்பூருக்கு செல்லவில்லை- கரு.நாகராஜன்

 

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை அவமதிப்பதாக நினைத்து ஒட்டுமொத்த இந்துக்களையும் வன்முறையாளர்கள் என குற்றம் சாட்டும் விதமாக மக்களவையில் பேசியுள்ளதாக எதிர்ப்புத் தெரிவித்து பாஜக மாநில துணைத்தலைவர் கரு . நாகராஜன் சென்னை தியாகராய நகரிலுள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கரு.நாகராஜன், "அண்டப் புளுகு ஆகாசப் புளுகை கூறுவது ராகுலுக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒருவரை பழிசுமத்துவது, பின்பு பின்  வாங்குவது இதுதான் ராகுலின் வழக்கமாக உள்ளது. மேடையில் கேலி கிண்டல் அடிப்பது போல் மக்களவை சபாநாயகருக்கு முதுகை காட்டியபடி எல்லா திசையிலும் திரும்பி பார்த்து பேசி வருகிறார். எதிர்கட்சித் தலைவர் பதவியை கேலிக் கூத்தாக்குகிறார். கருணாநிதி இந்துக்களை திருடர் என்றார். கடவுள் படங்களை மக்களவைக்குள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல்காந்தி வன்முறையாளர்கள் என்கிறார். 


அயோத்தியில் கோயில் கட்ட இடம் கொடுத்தோரை அநாதையாக விட்டுவிட்டனர் என பொய் கூறுகிறார் ராகுல்காந்தி. சட்டத்திற்கு புறம்பாக பேசுவோரின் மைக்கை எல்லா ஆட்சியிலும் சபாநாயகர் அணைத்து விடுவது வழக்கமானதுதான். ராகுல்காந்தியை காமெடியனாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். அவர் இந்துக்களை குறித்து பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதாக செய்தி கிடைத்தது. இந்துக்களை அவமதிக்கும் வகையிலான ராகுலின் பேச்சை தமிழக பாஜக எதிர்க்கிறது. ராகுலின் பேச்சை ஒட்டுமொத்த இந்துக்களும் எதிர்க்கின்றனர். பொய்யை வேடிக்கை பர்க்க முடியாது. 


எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாஜகவிற்கு பயமோ பதற்றமோ இல்லை. பிரதமர் என்ற முறையில் இந்துக்களுக்கு எதிரான கருத்தை மோடி எதிர்த்தார். நாடாளுமன்றத்தில் தமிழர்களின் செங்கோலுக்கு எதிரான கருத்தை திமுக ஏன் எதிர்க்கவில்லை? டிஆர்.பாலு, கனிமொழி அங்கு செங்கோலுக்கு ஆதரவாக பேசியிருக்க வேண்டும். மணிப்பூருக்கு பெரிய தலைவர்கள் சென்றால் அந்த மாநிலத்தில் கொந்தளிப்பு அதிகமாகலாம் என்பதால் கூட பிரதமர் மணிப்பூர் செல்வதை தவிர்த்திருக்கலாம்” என்றார்.