இனி எந்த தேர்தல் வந்தாலும் எடப்பாடி தென்மாவட்டத்தில் ஜெயிக்கமுடியாது- கருணாஸ்
இனி எந்த தேர்தல் வந்தாலும், துரோகச்செம்மல் எடப்பாடி தென்மாவட்டத்தில் ஜெயிக்கமுடியாது என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் சே. கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துரோகச் செம்மல் எடப்பாடி பழனிசாமி தரும் தேர்தல் வியூகம் வகுக்குறாராம், அதற்கு நேற்று (16.08.2024) செயற்குழு கூட்டமாம்! எனக்கு ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது, “கூரையில ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானத்தில ஏறி வையுகுண்டம் காட்டுவாராம்! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே மண்ணை கவ்வியவர், உள்ளாட்சி தேர்தலிலும், சட்டப்பேரவை தேர்தலிலும் ஜெயிக்கப் போறாராம்! இதில் தீர்மானம் வேறு! இன்று நடந்த செயற்குழுக்கூட்டத்தில் முன்மொழிந்த தீர்மானங்களும் பெரும்பாலும், ஏற்கெனவே பலமுறை உருட்டியவை! உருட்டியதையே உருட்டி இன்னும் எத்தனை நாள் ஏமாற்று போகிறார் எடப்பாடி!
கடந்த 2020 ஆண்டில் எடப்பாடி மெகா ஊழல்வாதி, நெடுஞ்சாலை துறையில் உறவினர்களுக்கு ஒப்பந்தம் வழங்கி ரூ. 6133.57 கோடி ஊழல் செய்தார்! அவரை எடப்பாடி பழனிச்சாமின்னு சொல்வதை விட டெண்டர் பழனிச்சாமின்னுதான் சொல்லனும்! அதுமட்டுமா கொரோனா பேரிடர் காலங்களில் ரேஷன் அரிசியை வெளிமார்க்கட்டில் விற்று ரூ. 450 கோடி ஊழல் செய்தார். சத்துணவு திட்டத்துக்கான முட்டை பருப்பு பாமாயில் 2400 கோடி ஊழல் செய்தார். தான் வகித்த பொதுப்பணித்துறையில் ஒப்பந்தங்களை மொத்தமாகத் தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்துச் சிக்கிக் கொண்டவர் இந்தப் பழனிசாமி. குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காகத் தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தவர்தானே எடப்பாடி. சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதுமட்டுமா? வருமான வரித்துறையினர் இவரது ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனை செய்தார்கள். டி.ஜி.பி.யே சிபிஐ விசாரணையில் சிக்கினார். தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், 'முதலமைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்' என்று குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியவர் பழனிசாமி. கொடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள். இப்படிப்பட்ட நீண்டதொரு 'குற்றப்பட்டியல்' கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று திமுகவை குற்றப் பார்வையோடு விமர்சனம் செய்து தீர்மானம் நிறைவேற்று கிறார். வெட்கமில்லையா? தி.மு.க. வை எந்த வகையிலும் விமர்சனம் செய்ய, இம்மியளவு கூட தகுதி இல்லாதவர் எடப்பாடி!
மண்புழுவைப் போல ஊர்ந்து போய் நாற்காலியைக் கைப்பற்றி, துரோகக் குணத்தால் நம்பிக்கைத் துரோகம் செய்து, பின்னர் பாஜகவின் பாதம் தாங்கி, அதனைத் தக்க வைத்து, பாஜக அமைத்துக் கொடுத்த திருட்டு வழியில் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்ட பழனிசாமி இன்று தீர்மானத்தை பாஜக அரசை கண் துடைப்பதற்கான இரண்டொரு தீர்மானத்தை காட்டி செல்லமாக கண்டிக்கிறார்.பா.ஜ.க. அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே உணவு என்பதை மட்டுமல்லாமல், பாஜக ஆட்சி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறியதைக் கேட்டு உடனே டெல்லிக்கு ஓடிச்சென்று பா.ஜ.க. அரசிடம் ஆதரவு தெரிவித்தவர் பழனிசாமி தானே.. மக்கள் அதை மறந்துவிடுவார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் பதிலடி தந்தார்கள். இன்னும் வருகின்ற தேர்தலிலும் தருவார்கள்!
எடப்பாடி கைக்கு அதிமுக எப்போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதல பாதாளத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பவர் அவர்தான் எடப்பாடி. இந்த சொரணையற்ற பழனிசாமிக்கு எத்தனை தடவைதான் மக்கள் பாடம் புகட்டுவார்கள்? நான் சார்ந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஓர் முடிவை எடுத்துள்ளது. அது, எடப்பாடியை இனி வருகின்ற தேர்தலில் எதிலும் வெல்லவிடாது தோற்கடிப்பது! வருகின்ற உள்ளாட்சி தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல் அனைத்திலும், எடப்பாடியின் அதிமுகவை தோற்கடிக்க, முக்குலத்தோர் புலிப்படையின் ஊரெங்கும் ஒலிக்கும்! தென் மாவட்டத்தில் இனி எடப்பாடி கால் வைக்க முடியாது. முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கு எடப்பாடி செய்த அத்தனை அரசியல் துரோகங்களுக்கு இனி நாங்கள் பொறுமை காக்கமாட்டோம்! எடப்பாடியை இனி அரசியல் அனாதை ஆக்கி, செல்லாகாசாக மாற்றுவோம்! தென்மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்து மக்கள் எதையும் மறக்கமாட்டார்கள். அதிமுக இனி தென்மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டால், அங்கே முக்குலத்தோர் புலிப்படை, தனது எதிர்ப்பை காட்ட எந்த வடிவத்திலும், போராட்டத்திற்கு வியூகம் வகுக்கும் என்பதை நான் நெஞ்சு உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.