×

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு தனித்தீர்மானம்- முதல்வருக்கு கருணாஸ் நன்றி

 

சமூகநீதி காக்க, சாதிவாரி கணக்கெடுப்பிற்கு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் கருணாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால்தான் உண்மையான சமூக நீதி காக்கப்படும் என்று கடந்த 06.04.2024 அன்று விரிவான அறிக்கையை வெளியிட்டேன். அதுமட்டுமின்றி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று நான் (சே.கருணாஸ்) 2016 சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 2021 வரை சட்டமன்ற அவையில் வலியுறுத்தி வந்துள்ளேன்.  நான் மட்டுமல்ல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொது அரசியல் நோக்கர்களும் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அனைவரின் ஒருமித்தக் கருத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்று (26.06.2024) இன்று சாதிவாரிக்கணக்கெடுப்புக் குறித்த தனித் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்யப்பட்டால்தான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், பட்டியலினப் பிரிவினருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மேற்சொன்ன தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணமாகும். இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகளில், எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு தரப்படுகிறது என்று நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பப்படும்போது சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அவசியமாகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. பட்டியலினத்தினர், பழங்குடியினர் சாதி தொடர்பான தகவல் மட்டுமே சேகரிக்கப்பட்டது.

அப்போதிலிருந்து இந்திய அரசு ஒரு கொள்கை முடிவாக சாதி வாரி கணக்கெடுப்பை தவிர்த்து வருகிறது. 1948ஆம் ஆண்டின் சட்டத்தில், பொதுவாக சாதி தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் விதிமுறைகள் ஏதும் கிடையாது. ஆகவே, இது தொடர்பாக தொடரப்படும் வழக்குகளில், இந்தச் சட்டத்தை மேற்கோள்காட்டி, சாதி தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உத்தரவிட நீதிமன்றம் மறுத்தும் வருகிறது. அதேபோல, இட ஒதுக்கீட்டினால் ஒரு சில சமூகங்களே அதிகம் பலன் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அதை நிரூபிக்கவும் சாதி சார்ந்த புள்ளிவிவரங்கள் தேவை.

சாதிக் கணக்கெடுப்பில் இருந்து வெளிவரும் புள்ளிவிவரங்கள் மூலம், யாருக்கு என்ன எண்ணிக்கை உள்ளது மற்றும் சமூகத்தின் வளங்களில் யாருக்கு என்ன பங்கு உள்ளது என்ற உண்மைகள் வெளிவரும். இட ஒதுக்கீட்டு அளிப்பதில் ஒரு தெளிவு கிடைக்கும். அந்த வகையில் மத்திய அரசிற்கு ஓர் அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர்கள் இன்று தனித்தீர்மானித்தை கொண்டு வந்துள்ளார். மேலும், ஒரு சாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போது, இன்னொரு சாதியினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். அவர்களுக்கு எத்தனை சதவீதம் கொடுப்பது என்று அரசினால் முடிவெடுக்க முடியாது. ஏனென்றால் அரசிடம் சாதி தொடர்பாக எந்தப் புள்ளிவிவரமும் கிடையாது. இதனால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறது. அதனால் நாங்கள் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோருகிறோம்! அதை அரசு இன்று ஏற்றுள்ளது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது அனைத்து சமூகங்களின் கோரிக்கைகளை ஏற்று, சமூக நீதியை நிலை நிறுத்த முடியும். அனைத்து சமூக மக்களும் சம உரிமை பெற சாதிவாரி கணக்கெடுப்பு என்பது முக்கியமானது. அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதே சமூகநீதியாகும்.  அந்த சமூகநீதியை காக்க இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்திருக்கிற தமிழக முதல்வர் அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.