“கதவை உடைத்து உள்ளே வந்து விடுவோம்”... போலீசாரின் எச்சரிக்கையால் அதிர்ந்து போன கஸ்தூரி
ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஹரி என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி தனிப்படை போலீசாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி பேசக் கூடியவர்கள் பற்றி அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு தரப்பினர் புகார் அளித்ததை தொடர்ந்து, 192- கலவரத்தை தூண்டுதல், 196(1) (a)-மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல், 353(1) (b)- பொது அமைதியை கெடுக்கும் தவறான தகவல்களை பரப்புதல், 353(2)- மதம் இனம் மொழி அடிப்படையில் பகைமை உண்டாக்கும் பேச்சு, அவதூறு பரப்புரை ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். வழக்கு விசாரணைக்காக சம்மன் கொடுக்க ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் வீட்டை பூட்டிவிட்டு செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு கஸ்தூரி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஹரி வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வருகின்றனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்நிலையில் ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஹரி வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரி, வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே மறைந்து இருந்ததாக கூறப்படுகிறது. கதவை பூட்டியபடி உள்ளே இருந்த கஸ்தூரி, காவல்துறையினர் சென்ற போது கதவை நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததாகவும், ‘கதவை உடைத்து உள்ளே வந்து விடுவோம்” என போலீசார் எச்சரித்ததை அடுத்து கஸ்தூரி கதவை திறந்ததாகவும் தகவள்கள் தெரிவிக்கின்றன. வழக்குப்பதிவு செய்தவுடன், செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கஸ்தூரியை, தயாரிப்பாளர் ஹரியின் செல்போன் எண்ணை பயன்படுத்தி அவரது வீட்டுக்கு வந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.