×

சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி- கஸ்தூரி

 

சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

 


சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி கடந்த நவம்பர் 3ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை கிளம்பியது. தொடர்ந்து, அவருக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவருக்கு எதிராக ஏராளமான புகார்கள் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டன.எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது  நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கஸ்தூரி ஜாமீன் பெற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சம்மன் கொடுக்க சென்றபோது வீடு பூட்டியிருந்ததாகவும், அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நடிகை கஸ்தூரியின் வீட்டு பணியாளர்களிடம் தனித்தனியாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர், ஹைதராபாத்திற்கு அருகே இருப்பது தெரியவந்தது.  தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் என்பவர் வீட்டில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் 14 ஆவது நீதிமன்ற நீதிபதி தயாளன் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்த நிலையில், அவர் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, “மூன்று மொழிகளிலும் தம்மை ஆதரித்தவர்களுக்கு நன்றி. தன்னை குடும்பம் போல் பாதுகாத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வழக்கறிஞர்களுக்கும் அரசியல் வித்தியாசம் பார்க்காமல், ஆதரவு தந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி. தன்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கும், ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. புழல் சிறையில் தன்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி . சிறு குரலாக இருந்த என்னை, சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. சமூக வலைத்தளங்களில் தம்மை ஆதரித்து குரல் கொடுத்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி  தம்மீது அன்பு செலுத்தி உறுதியாக ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி” எனக் கூறினார்.