×

கொடநாடு வழக்கு- வங்கிகளுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு தற்போது ஜாமினில் உள்ள சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கி கணக்கு பரிவர்த்தனை விபரங்களை கேட்டு சம்பந்தபட்ட தேசிய வங்கிகளுக்கு சிபிசிஐடி போலிசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதற்கு ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மூளையாக செயல்பட்ட நிலையில் அவர் சம்பவம் நடைபெற்ற இரண்டாவது நாளில் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். 

இந்த கொலை கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், தீபு, ஜம்சீர் அலி, சதீசன், பிஜின் குட்டி, உதயகுமார், மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, ஜித்தின் ஜாய் ஆகியோரும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் உள்பட12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செயலான் உள்ளிட்ட 12 பேரிடமும் வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களிடமும் தொடர்ந்து அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குறிப்பாக முதல் குற்றவாளியான சயான் இரண்டாவது குற்றவாளியான வாளையார் மனோஜ் உள்ளிட்ட 12 பேரை சிபிசிஐடி போலிசார் நேரில் அழைத்து விசாரித்து உள்ளனர். அப்போது அவர்களது வங்கி கணக்கு எண்களையும் பெற்றுள்ள சிபிசிஐடி போலிசார் சம்பந்தபட்ட வங்கிகளுக்கும்,  கோவையில் உள்ள தேசிய மயமாக்கபட்ட வங்கிகளுக்கும் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2017 ஏப்ரல் 23-ந்தேதி  முதல் தற்போது வரை இவர்களது வங்கி கணக்கில் நடைபெற்றுள்ள பண பரிவர்த்தனை விபரங்களை வழங்குமாறு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வங்கி பரிவர்த்தனை விபரங்களையும் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.