×

கொடநாடு வழக்கு- அதிமுக முக்கிய புள்ளி ஆஜர்

 

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் சஜீவனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2017 -ல் நடைபெற்ற கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் உயிரிழந்த நிலையில், சயான், வாளையார் மனோஜ்,  தீபு, பிஜின் குட்டி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஏராளமான சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில்,  சம்பவத்தன்று நடந்த  தொலைபேசி அழைப்பு பதிவுகள் அனைத்தும் சிபிசிஐடி போலீசார் பெற்று விசாரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட 12 பேர் உள்ளிட்ட சிலரின் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குகளையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  


இதனிடையே கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பி சென்ற நபர்களை கூடலூர் போலீசார் பிடித்த போது,  அவர்களை விடுவிக்குமாறு செல்போன் மூலம் அழைத்து பேசிய அதிமுக பிரமுகர் சஜீவனிடம் கடந்த முறை தனிப்படை போலீசார் விசாரித்த நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரிக்க சமன் அனுப்பினர். கடந்த நவம்பர் 5ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில் அவர் துபாயில் இருந்ததால் அன்றைய தினம் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இன்று மீண்டும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சஜீவன் ஆஜராகி உள்ளார். சி பி சிஐ டி போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சஜீவன், கோடநாடு பங்களாவில் உள்ள அனைத்து மர வேலைகளையும் ஒப்பந்தம் எடுத்து செய்தவர். இதனால் உள்ளே இருக்கக்கூடிய அனைத்து அறைகள், லாக்கர் உள்ளிட்ட விவரங்கள் அறிந்தவர் என்பதாலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தப்பிச் செல்லும்போது அவர்களை விடுவிக்குமாறு போலீஸிடம் பேசியவர் என்பதாலும் சஜிவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.