எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் எனக்கு அமைச்சர் பதவி- கோவி. செழியன்
டெல்டா மாவட்டத்தின் பிரதிநிதியாக, எளிய தொண்டனுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார் முதல்வர் என கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் புதிய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆவடி நாசர், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிலையில், கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோவி.செழியன், “டெல்டா மாவட்டத்தின் பிரதிநிதியாக, எளிய தொண்டனுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார் முதல்வர். அரசு கொறடாவாக இருந்த என்னை அமைச்சராக உயர்த்திய முதல்வருக்கு நன்றி! பெரியார் சமத்துவபுரத்தில் வாழ்ந்த சாமானியனான எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் அடுத்தகட்ட நிகழ்வாக அமைச்சராக வரவேண்டும் என ஆசைப்படுவார்கள். எந்த நம்பிக்கையில் எனக்கு பதவி வழங்கபட்டதோ அதை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன்.” என்றார்.