×

அதிமுகவுக்கு வாழ்வா, சாவா தேர்தல்! தோற்று போனால் சிறிய கட்சிகள் மேல் வந்துவிடும்: கே.பி.முனுசாமி

 

2026 தேர்தல் களம் நமக்கு வாழ்வா சாவா போன்றது. இதில் வெற்றி பெற்றால் தான் நாம் ஷோக்காக டிரஸ் போட்டு செல்ல முடியும் என அதிமுக துணை பொதுச் செயலாளர் முனுசாமி கள ஆய்வு கூட்டத்தில் பேசினார்.

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட கள ஆய்வுக் கூட்டம் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக துணை பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே பி முனுசாமி, அதிமுக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு 2026ம் ஆண்டு தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். 

இக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக துணை பொதுச் செயலாளர் முனுசாமி, “2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா சாவா போன்றது. அதிமுகவின் கவுரவம், எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ் காக்க வேண்டும் என்றால் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். வெற்றியை இழந்தால் முன்பு மாதிரி அரசியல் களம் தற்போது இல்லை. தமிழகத்தில் ஆரம்ப அரசியல் களத்தில் திமுக- காங்கிரஸ் என இருந்தது. திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து வந்து அதிமுக கட்சியை ஆரம்பித்தவுடன் திமுக, அதிமுக என களம் மாறியது. காங்கிரஸ் காணாமல் போனது. தற்போது தேர்தல் சமயத்தில் திமுக அல்லது அதிமுக தோலில் காங்கிரஸ் பயணிக்கிறது. 

தற்போது தேர்தல் களத்தில் திமுக- அதிமுக என தொடர்ந்து வருகிறது. ஆனால் இப்பொழுது ஜாதி கட்சிகள் பல வந்துள்ளது. சுய முயற்சியில் சில கட்சிகள் வந்துள்ளன. இவ்வாறு வரும்போது வாக்காளர்களின் சிந்தனை மாறி வருகிறது. இரண்டு கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்கள் நான்கு கட்சிக்கு வாக்களிக்க வேண்டி உள்ளது. எனவே நாம் உஷாராக இல்லாமல் வெற்றி வாய்ப்பு இழந்தால் சிறிய கட்சிகள் மேலே வருவதற்கான வாய்ப்பு உண்டு. நமக்கு மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்த கட்சியை காப்பாற்ற வேண்டியது. அது நமது தலையாய கடமை, அதற்காக எப்படி வேண்டும் என்றாலும் போராடலாம். 

தேர்தலில் அனைவரும் செலவு செய்ய வேண்டும். நிறைய பேர் ஷோக்காக டிரஸ் போட்டுக் கொண்டு எவ்வித வேலையும் செய்யாமல் வருவது எல்லாம் இனிமேல் இருக்கக் கூடாது. ஷோக்காக டிரஸ் போட்டுக் கொண்டு வரவேண்டும் என்றால் 2026ம் ஆண்டு தேர்தலில் ஜெயித்தால் தான் ஷோக்காக டிரஸ் போட்டுக் கொண்டு செல்ல முடியும். எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் ஆகிய நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். சீனியர், ஜூனியர் என்று பார்க்காமல் அனைவரும் ஒன்றுபட்டு கடுமையாக உழைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என பேசினார்.