×

அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை: கே.பி.முனுசாமி

 

திருமாவளவன் அதிமுக நலன் சார்ந்து பேசுகிறாரா அல்லது சுயநலமாக பேசுகிறாரா என தெரியவில்லை, நலனுக்கென்றே நாங்கள் எடுத்துக்கொள்வோம் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.


கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுகவின் கள ஆய்வுக்கூட்டம் ஓசூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. இதில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி. முனுசாமி, “அதிமுக ஜனநாயக கட்சி, ஜனநாயகம் உள்ள இடத்தில் தான் கேள்வி இருக்கும். அங்கு தான் சண்டை வரும், அதிமுக ஜனநாயகம் உள்ள கட்சி. காங்கிரஸ் கோஷ்டி போல அதிமுகவில் கோஷ்டி இல்லை காங்கிரஸ் கட்சியில் 4 பேர் இருந்தால் 5 கோஷ்டி இருக்கும்.  அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை. அதிமுகவில் உழைப்பவர்கள் தானாக உயர்ந்த இடத்திற்கு வர முடியும். ஆனால் திமுகவில் தாத்தா, அப்பா, அடுத்தது மகன் என்ற நிலையில் தலைவர்கள் வருகின்றனர்.

அதிமுக நலன் சார்ந்து பாஜக உடன் கூட்டணி வேண்டாமென திருமாவளவன் கூறுகிறார். திருமாவளவன் தமிழகத்தில் பாஜக காலூன்ற கூடாது என நினைக்க கூடியவர். அதுக்காக அவர் அதிமுக நலன் சார்ந்து பேசுகிறாரா? சுயநலமாக பேசுகிறாரா என தெரியவில்லை. ஆனால் அவர் பேசுவது எங்கள் நலனுக்கானது என்றே எடுத்துக்கொள்வோம்” என்றார்.