×

கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வழக்கு : போலி முகாம்.. போலி மாஸ்டர்..  என்.சி.சி-க்கு  எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கை

 


கிருஷ்ணகிரியில் எந்த என்.சி.சி. முகாமும் நடக்கவில்லை, சிறுமி பாலியல் வழக்கில் கைதான நபர் என்.சி.சி.யை சார்ந்தவர் இல்லை என என்.சி.சி. தலைமை அலுவலகம் விளக்கமளித்துள்ளது.  

கிருஷ்ணகிரி  பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அடுத்தடுத்த பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  காவேரிபட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவர்,  கிருணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் NCC பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருந்தார். குறிப்பிட்ட  அந்த பள்ளியில் கடந்த  5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் ( NCC Camp) 17 மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பள்ளியிலேயே தங்கி முகாமில் பங்கேற்று வந்த நிலையில் கடந்த 9ம் தேதி முகாமில் கலந்துகொண்ட 12 வயது சிறுமியை சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

  தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முதல்வரிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகாரளித்து உள்ளார். அதற்கு பள்ளி நிர்வாகத்தினர் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் எனக்கூறி மாணவியை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து கடந்த 16ம் தேதி மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில்,  தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.  

இதனை தொடந்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிபர், தாளாளர் சாம்சன் வெஸ்லி, என்.சி.சி பயிற்சியாளரான சக்திவேல், சிந்து, சத்யா, சுப்பிரமணி, ஆசிரியை கோமதி, என்.சி.சி பயிற்சியாலர் சிவராமன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.  இந்நிலையில்  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சியாளர் சிவராமன், பள்ளியில் பல்வேறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார் என்றும்,  இவர் கிருஷ்ணகிரி,  தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் என்.சி.சி பயிற்சி வகுப்பு நடத்துகிறார் என்பதும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் திடுக்கிடும் தகவலாக கிருஷ்ணகிரியில் எந்த என்.சி.சி. முகாமும் நடக்கவில்லை என்றும், கைதான நபர் என்.சி.சி.யை சார்ந்தவர் இல்லை என என்.சி.சி. தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம் கிருஷ்ணகிரியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளிச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்திருக்கிறது.