×

சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்தில் நியாயம் இருக்கிறது- கே.எஸ்.அழகிரி

 

 

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்தில் நியாயம் இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டியளித்துள்ளார். 

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்தில் நியாயம் இருக்கிறது.பெண்களை உடன்கட்டை ஏற செய்தது தான் சனாதனம், தமிழ் மண் இதையெல்லாம் போராடி வென்ற மண். திமுகவும், காங்கிரஸும் இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். நாங்களும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் தான்.  கடவுள் மறுப்பு என்பது வேறு, மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அகற்ற சொல்வது என்பது வேறு. சனாதன மறுப்பு என்பது கடவுள் மறுப்பு அல்ல” என்றார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்” என பேசியிருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடதக்கது.