×

அரைவேக்காடு அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை- கே.எஸ்.அழகிரி

 

அரைவேக்காடு அண்ணாமலை, அறிந்திருக்க வாய்பயில்‌  தமிழக அரசியல்‌ வரலாற்றை தந்தை பெரியார்‌, பெருந்தலைவர்‌ காமராஜரின்‌ பங்களிப்பை வரலாற்று நூல்கள்‌ மூலம்‌ அறிந்து கொண்டு பேசுவது நல்லது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பா.ஜ.க. தலைவர்‌ அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்காக பல கட்டங்களாக விட்டுவிட்டு பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்‌. பெரும்‌ பணத்தை செலவு செய்து கட்சியினரை திரட்ட குறிப்பிட்ட நகர வீதிகளில்‌ அந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இதில்‌ உரையாற்றுகிற அண்ணாமலை, ஆளுங்கட்சியைச்‌ சேர்ந்தவர்‌ என்கிற மமதையில்‌ காழ்ப்புணர்ச்சியோடு சர்ச்சைக்குரிய விஷமத்தனமான கருத்துகளை கூறி வருகிறார்‌. தமிழகத்தின்‌ வளர்ச்சிக்காக பாடுபட்ட தந்தை பெரியார்‌, பெருந்தலைவர்‌ காமராஜர்‌, முத்தமிழ்‌ அறிஞர்‌ கலைஞர்‌ ஆகியோர்‌ குறித்து மிக மிக இழிவான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்துகிறார்‌. இவரைப்‌ போல இழிவாகக்‌ கருத்து கூறியவர்கள்‌ கடந்த காலங்களில்‌ வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்பட்டது. திடீர்‌ அரசியல்வாதியான அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்ணாமலையை பொறுத்தவரை ஆட்டைக்கடித்து, மாட்டை கடித்து தற்போது மனிதனை கடிக்க வந்திருக்கிறார்‌. தமிழகத்தில்‌ ஈராயிரம்‌ ஆண்டுகளாக ஊறிப்‌ போன சமூக அடக்குமுறைகளை, அநீதிகளை, ஜாதிய ஏற்றத்‌ தாழ்வுகளை, தீண்டாமை கொடுமைகளை துடைத்தெறிவதற்காக தமது வாழ்நாள்‌ முழுவதையும்‌ அர்ப்பணித்துக்‌ கொண்டு தமிழ்ச்‌ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அற்புதமான தலைவர்‌ தந்தை பெரியார்‌. 

இந்து மதத்திலே ஊறிப்‌ போன சனாதன, பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கை கொண்ட பழக்க வழக்கங்களுக்கு மக்கள்‌ பலியாகக்‌ கூடாது என்று சில கருத்துகளை வலிமையாக தந்தை பெரியார்‌ தனது பரப்புரையில்‌ கூறியிருக்கிறார்‌. நீண்ட நெடுங்காலமாக ஆத்திகழும்‌, நாத்திகழும்‌ இந்த சமூகத்திலே இருந்து கொண்டு தான்‌ வருகிறது. கடவுள்‌ நம்பிக்கை உள்ளவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை கடவுள்‌ மறுப்பாளர்களுக்கும்‌ பரப்புரை மேற்கொள்ள உரிமை இருக்கிறது. அந்த அடிப்படையில்‌ ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும்‌ மேலாக கடவுள்‌ மறுப்பு கொள்கையை பகுத்தறிவின்‌ அடிப்படையில்‌ மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தந்தை பெரியார்‌ பரப்புரை மேற்கொண்டு வந்தார்‌. இதில்‌ மாற்றுக்‌ கருத்து கூறுவதற்கு அனைவருக்கும்‌ உரிமை உண்டு. ஆனால்‌ அண்ணாமலையைப்‌ போல நாகரீகமற்ற முறையில்‌ தந்தை பெரியாரை விமர்சனம்‌ செய்தது கிடையாது.  

ஸ்ரீரங்கம்‌ கோயிலுக்கு முன்புள்ள தந்தை பெரியார்‌ சிலையை அகற்றுவது தான்‌ நோக்கம்‌ என்று கூறுகிறார்‌. பாராளுமன்ற மைய மண்டபத்தில்‌ மகாத்மா காந்தி படுகொலையில்‌ குற்றவாளியான சாவர்க்கர்‌ படத்தை பா.ஜ.க. திறந்து வைத்ததற்குக்‌ கடுமையான விமர்சனம்‌ எழுந்தது. ஆனால்‌, அந்த படத்தை அகற்ற வேண்டுமென்று கோரி எவரும்‌ போராட்டம்‌ நடத்த முன்வரவில்லை. காந்தியடிகளை கொன்ற கோட்சேவை தியாகி என்று பிரக்யாசிங்‌ தாகூர்‌ கூறியதற்காக பா.ஜ.க. அவர்‌ மீது நடவடிக்கை எடுத்ததா? இந்திய விடுதலையைப்‌ பெற்றுத்‌ தந்த மகாத்மா காந்தியை இழிவுபடுத்துகிற பா.ஜ.க.வுக்கு என்ன தண்டனை கொடுப்பது ? இதற்கெல்லாம்‌ அண்ணாமலை விளக்கம்‌ கூறுவாரா ?  

நீதிக்கட்சி ஆட்சிக்‌ காலத்திலிருந்து தமிழக மக்கள்‌ அனுபவித்து வந்த இட ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றங்களால்‌ ஆபத்து வந்த போது, அரசமைப்புச்‌ சட்டம்‌ 1950 இல்‌ அமலுக்கு வந்தவுடனேயே அதற்காக திருச்சியில்‌ குரல்‌ கொடுத்துப்‌ போராடியவர்‌ தந்தை பெரியார்‌. அந்த போராட்டத்தின்‌ தீவிரத்‌ தள்மையை உணர்ந்து அந்த இட ஒதுக்கிட்டுக்‌ கொள்கைக்கு அரசமைப்புச்‌ சட்டத்தில்‌ திருத்தம்‌ கொண்டு வர வேண்டும்‌ என்று அன்றைய பிரதமர்‌ நேருவிடம்‌ வலியுறுத்தியவர்‌ பெருந்தலைவர்‌ காமராஜர்‌. அதனடிப்படையில்‌ தான்‌ அரசமைப்புச்‌ சட்டம்‌ அமலுக்கு வந்த சில. மாதங்களிலேயே அரசியல்‌ நிர்ணய சபையில்‌ பிரதமர்‌ நேரு முதல்‌ திருத்தம்‌ கொண்டு வந்து இட ஒதுக்கீட்டுக்குச்‌ சட்டப்‌ பாதுகாப்பு வழங்கினார்‌. அதனடிப்படையில்‌ தான்‌ இன்றைக்கும்‌ பின்தங்கிய பட்டியலின மக்கள்‌ இட ஒதுக்கீட்டை 75 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார்கள்‌. இத்தகைய நடவடிக்கையின்‌ மூலம்‌ சமூகநீதியைப்‌ பாதுகாத்த தந்தை பெரியாரையும்‌, பெருந்தலைவர்‌ காமராஜரையும்‌ இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச்‌ சமுதாயம்‌ என்றைக்கும்‌ மன்னிக்காது. இத்தகைய அருவெறக்கத்தக்க அநாகரீக பேச்சுகளினால்‌ பா.ஜ.க. குழிதோண்டிப்‌ புதைக்கப்படுவது. 

தந்தை பெரியார்‌ காங்கிரசை 1952 தேர்தலில்‌ 60 அடி குழிதோண்டிப்‌ புதைப்பேன்‌ என்று பேசியதாக அண்ணாமலை புலம்பியிருக்கிறார்‌. எந்த பெரியார்‌ 1952 தேர்தல்‌ பரப்புரையில்‌ அத்தகைய கருத்தைக்‌ கூறினாரோ, இரண்டு ஆண்டுகள்‌ கழித்து 1954 ஏப்ரல்‌ 13 அன்று தமிழகத்தின்‌ முதலமைச்சராக காமராஜர்‌ பொறுப்பேற்ற செய்தி கிடைத்தவுடனே அதை ஆதரிக்கத்‌ தொடங்கினார்‌. அவரது ஆட்சிக்‌ காலமான ஒன்பதரை ஆண்டுகள்‌ முழுவதும்‌ ஆதரித்து தமிழகத்தின்‌ பட்டிதொட்டியெங்கும்‌ பெரியார்‌ பரப்புரை மேற்கொண்டதை அரைவேக்காடு அண்ணாமலை, அறிந்திருக்க வாய்பயில்‌  தமிழக அரசியல்‌ வரலாற்றை தந்தை பெரியார்‌, பெருந்தலைவர்‌ காமராஜரின்‌ பங்களிப்பை வரலாற்று நூல்கள்‌ மூலம்‌ அறிந்து கொண்டு பேசுவது நல்லது. இத்தகைய பேச்சுகளினால்‌ கடுமையாகப்‌ பாதிக்கப்படப்‌ போவது அண்ணாமலை அல்ல. மாறாக, வருகிற 2024 மக்களவை. தேர்தலில்‌ 39 தொகுதிகளிலும்‌ டெபாசிட்‌ இழக்கவே அண்ணாமலையின்‌ பேச்சுகள்‌ உதவப்‌ போகின்றன. எனவே, தமிழக மக்களின்‌ கோபத்திற்கும்‌, வெறுப்புக்கும்‌ அண்ணாமலை ஆளாவதை எவராலும்‌ தடுக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.