×

"திருமாவளவன் முதல்வராவதற்கான கனவு நடக்காது" - எல்.முருகன்

 

அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த திருமாவளாவன் எப்படி மொத்த தலித் மக்களுக்கான தலைவராக இருக்க முடியும்? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் ஆவதற்கான கனவு நடக்காது. சமூகநீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். இரட்டை வேடம் போடும் திருமாவளவன் எப்படி ஒரு தலித் தலைவராக இருக்க முடியும்? திருமாவளவனை ஒரு சின்ன கட்சியின், அமைப்புக்கான தலைவராகத்தான் பார்க்கிறேன். ஆளுநர் உண்மையைச் சொன்னால் திமுகவினருக்கு கசக்கிறது. ஆளுநருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே முரண்பாடு இருந்து கொண்டேதான் இருக்கிறது. பாஜக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.

சென்னை வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழ்த்தாய் வாழ்த்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது. தமிழுக்கு எதிரானவர்கள் பாஜகவினர் என்ற பிம்பத்தை உருவாக்க திமுக முயற்சிக்கின்றனர். டிடி தொலைக்காட்சி இந்தி விழா நிகழ்ச்சியில் ஏதேனும் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். ஐநா சபையில் தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றியவர் பிரதமர் மோடி. தமிழ்நாட்டின் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. திருவள்ளுவருக்கு 4 இடங்களில் கலாச்சார மையங்கள் அமைத்து தமிழுக்கு பெருமை சேர்ப்பது பாஜக அரசு” என்றார்.