×

ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின் 

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 57,325 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 57,325 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.03.2024) கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 560 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் 273 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 489 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 57,325 பயனாளிகளுக்கு 223 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அரசு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொள்ளாச்சியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோயம்புத்தூர் வந்தடைந்தார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர். பின்னர் கோயம்புத்தூரிலிருந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விழா நடைபெறும் பொள்ளாச்சிக்கு சாலை சாலை மார்க்கமாக சென்றார். கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி வரை வழிநெடுகிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தல்


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 174 கோடியே 40 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பு கோபுரம், உயர்தர அறுவை அரங்கு, டவர் பிளாக்கில் மருத்துவ எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் வால்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 4 கோடி ரூபாய் செலவில் மேட்டுப்பாளையம் வட்டம், மானார் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கான தங்கும் விடுதி, சிங்காநல்லூர் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி;

அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் 10 கோடியே 11 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் 160 வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள்;  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 3 கோடியே 31 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் 21 புதிய நியாய விலைக் கட்டடங்கள்; வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில், 13 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் மதுக்கரை வட்டம், குறிச்சி புறநகர் திட்டப் பகுதியில் வணிக வளாகம்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 16 கோடியே 69 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில், சுயஉதவிக் குழு கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள், 29 புனரமைக்கப்பட்ட சாலைகள்; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 17 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் உயிரி தொழில் நுட்ப மகத்துவ மையம்; 3காவல் துறை சார்பில், 1 கோடியே 62 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில், கோவை மாநகர காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட உயர் காவல் அதிகாரிகள் விருந்தினர் மாளிகை மற்றும் காவல்துறை ஓட்டுநர்கள் அறைகள்; என மொத்தம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 240 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் 65 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.