×

எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்- நாற்காலிகளை வீசியதால் பரபரப்பு

 

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் இடைடே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தின் உள்ளே புங்கை மரத்தடியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் மற்றும் அவருடைய தம்பி கோபி மற்றும் சிலர் வழக்கு சம்பந்தமாக எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார், விமல், சுரேஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசிக்கொண்டதுடன் கைகளால் தாக்கி கொண்டனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இதில் இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனை சென்றுள்ளனர். உடனே கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் மோதிக்கொண்ட சம்பவம் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களான செந்தில்நாதன் சக்திவேல் இருவரும் அயனாவரம் பகுதியில் நடந்த விபத்து தொடர்பான வழக்கை நடத்தி வந்ததாகவும், ஆனால் அந்த வழக்கில் அவர்களுக்கான செட்டில்மெண்டை கொடுக்காமல் மனுதாரரை அழைத்து அந்த விபத்து வழக்கை விஜயகுமாரும் அவரது நண்பர்களான விமல், தினேஷ் ஆகியோரும் எடுத்து நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் நேற்றைய தினம் அயனாவரம் பகுதியில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது,
அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களான செந்தில்நாதன், சக்திவேல்  இருவரும் மேலும் வழக்கறிஞர்கள் அல்லாத இருவரை எழும்பூர் நீதிமன்றத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்து வந்ததாகவும் அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.