உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்- வானதி சீனிவாசன்
இந்து மதத்தை கொசு, டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டுப் பேசுவதா? உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் நேற்று (செப். 2) 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்' என்ற பெயரில், இந்து மத எதிர்ப்பையே முழுநேர தொழிலாகக் கொண்ட அமைப்பு ஒரு கூட்டம் நடத்தியுள்ளது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தனது இந்து மத வெறுப்பை கக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவின்போது எனது மனைவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என பிரகடனம் செய்த உதயநிதி, "சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது. மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாதது என்று பொருள். எதுவும் நிலையானது அல்ல. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காவே கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட இயக்கமும் உருவானது. வீட்டுப் படிக்கட்டை தாண்டக் கூடாது என சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தியது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா காய்ச்சல் போன்றவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அதுபோல ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம்" என்று பேசியிருக்கிறார். 10 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து, தமிழ்நாட்டு மக்களால் திமுக விரட்டப்பட்டிருந்தது. அப்போது திமுகவில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்தான் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.
சனாதனம் என்பது நீடித்து நிலைத்து நிற்கும் ஒரு வாழ்வியல் நெறி. அறம். தத்துவம். சனாதன தர்மமே இன்று இந்து மதம் என்றழைக்கப்படுகிறது. சனாதனம் என்ற பெயர் மட்டுமல்ல, திராவிடம், கருணாநிதி, உதயசூரியன், உதயநிதி எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள்தான். இந்து மதத்திற்கென்று எந்தத் தலைவரும் இல்லை. இந்து மதம் போன்று கட்டற்ற சுதந்திரம் கொண்ட மதம் எதுவும் இல்லை. இங்கு தனி மனிதனும் கடவுள் ஆகலாம். அவ்வளவு சுதந்திரம். இந்து மதம் சந்தித்தது போன்ற மாற்றங்களை உலகில் எந்த மதமும் சந்தித்திருக்காது. காலம் தோறும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டதால்தான் பல்லாயிரம் ஆண்டுகள் முயற்சித்தும் இந்து மதத்தை யாராலும் அழிக்க முடியவில்லை. 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கடவுளையே கேள்வி கேட்ட மதம் இந்து மதம்.
ஆனால் கட்சிக்குள் கேள்வி கேட்டதற்காக எம்ஜிஆரையும், வைகோவையும் விரட்டி அடித்தது தான் திமுகவின் வரலாறு. திமுகவில் மட்டும் எதுவும் மாறாது. கருணாநிதி அவரது மகன் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி என்றுதான் தலைமைக்கு வர முடியும். இப்போது உதயநிதியின் மகனுக்கும் பாசறை தொடங்கியிருக்கிறார்கள். இப்படி ஒரு குடும்பத்தைத் தவிர மற்றவர்கள், தலைமைப் பதவிக்கு வர முடியாத ஒரு இயக்கம் திமுக. இப்படிப்பட்ட திமுக தான் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. ஆனால், கட்டற்ற சுதந்திரம் கொண்ட சனாதன தர்மமான இந்து மதத்தை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது என்கிறார் உதயநிதி.
வீட்டு படிக்கட்டைக் கூட தாண்ட முடியாமல் பெண்களை அடிமையாக வைத்திருந்தது சனாதனம் என்கிறார் உதயநிதி. திமுகவுக்கு வாரிசு அரசியலில்கூட ஆணாதிக்கம் தான். கருணாநிதியின் அரசியல் வாரிசான ஸ்டாலினுக்கு மகள் இருந்தும், மகன் உதயநிதியைத்தான் அரசியல் வாரிசாக்கியுள்ளார். ஸ்டாலினியின் மகள் அதாவது உதயநிதியின் தங்கை இன்னும் வீட்டு படிக்கட்டைகூட தாண்ட முடியாமல் தான் இருக்கிறார். ஆனால், உதயநிதி வீட்டுப் படிக்கட்டை தாண்டி, திரைத்துறை, கட்சி, ஆட்சி என அதிகாரத்துக்கு வந்து விட்டார். குடும்பத்திலேயே பெண்களுக்கு சமூக நீதியை நிலைநாட்ட முடியாதவர்கள், சனாதனத்தின் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். திமுகவில் பெண்ணுரிமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது சகோதரி கனிமொழியின் மனசாட்சிக்குத் தெரியும்.
கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா காய்ச்சல் போன்றவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அதுபோல ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம்" என்றும் உதயநிதி பேசியிருக்கிறார். அருவருக்கத்தக்க, ஆணவமிக்க, சமூகத்தில் வெறுப்பை விதைக்கும் பேச்சு இது. உலகெங்கும் 110 கோடிக்கும் அதிகமான மக்கள் பின்பற்றக்கூடிய ஒரு மதத்தை, கொசு, டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு அவமானப்படுத்தி இருப்பதை ஏற்க முடியாது. இந்து மதத்தை இழிவுபடுத்தும், அவமதிக்கும் இந்த பேச்சை காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஒரு அரங்கில் தான் உதயநிதி பேசியிருக்கிறார். திமுகவோடு கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? உதயநிதியின் இந்த வெறுப்பு பேச்சோடு காங்கிரஸ் கட்சி உடன்படுகிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவு படுத்திய இந்த பேச்சுக்காக, உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.