×

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்..  

 

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

கடந்த சில மாதங்களாக கேரளா, கர்நாடகாவை புரட்டிப்போட்ட கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆந்திராவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அங்கு பெய்துவரை கனமழை பாதிப்புகளால் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் மற்றும் கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அந்த மாநிலங்களில் தொடர் மழை பெய்தும் வருகிறது.  

இந்த நிலையில்,   தமிழக வானிலை முன்னறிவிப்பு குறித்து  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 12.30 முதல் 2.30 மணிக்குள் வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில், கலிங்கபட்டினத்துக்கு அருகே கரையை கடந்தது. இதனால், தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். செப்.3-ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.