×

சர்ச்சைக்கு மகாவிஷ்ணு விளக்கம் அளிப்பார் - பரம்பொருள் அறக்கட்டளை

 

சென்னை பெருநகர எல்லைக்குள், சைதாப்பேட்டை பகுதியில்  உள்ள ஒரு அரசுப்பள்ளியில் ‘பரம்பொருள் பவுண்டேசன்’  என்ற அமைப்பை சேர்ந்த சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு சனாதன கருத்துக்களை நியாயப்படுத்தியும், மூட பழக்க, வழக்கங்களை வாழ்வின் நன்னெறியாக விளக்கி பேசியுள்ளார். இவரது உரைக்கு ஆட்சேபனை தெரிவித்த ஆசிரியரை மிரட்டப்பட்டுள்ளார். இதே சொற்பொழிவாளர் மாணவிகள் நிறைந்த மற்றொரு பள்ளி நிகழ்வில் பேசும் போது பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தி பேசியுள்ளார். பெண்கள் அழகின்றியும், மாற்றுத்திறனாளிகளாவும் பிறந்து வருகிறார்கள் என்றெல்லாம் பேசி அவமதித்துள்ளார். 

இச்சம்பவம் பூதாரகான நிலையில் பரம்பொருள் அறக்கட்டளையின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார், உளவுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் இதற்கு கிளை இருப்பது தெரியவந்துள்ளது. அறக்கட்டளையை நடத்தும் மகாவிஷ்ணு என்பவர் தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், சில தினங்களில் இந்தியா வருவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மகா விஷ்ணுவின் பின்னணி, அறக்கட்டளையின் வருவாய் மற்றும் என்னென்ன பணிகளில் ஈடுபடுகிறது, எந்தெந்த பள்ளிகளில் என்னென்ன தலைப்புகளில் அவர் பேசியுள்ளார் என்ற பல கோணத்தில் விசாரணை நடக்கிறது.

இந்நிலையில் மூடநம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருப்பதாகவும், இப்பிரச்னை குறித்து விரைவில் அவர் விளக்கம் அளிப்பார் எனவும் திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.