அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவால் தீவிபத்து; கேஸ் சிலிண்டரும் வெடித்ததால் பரபரப்பு
தெலுங்கானா மாநிலம் மணிக்கொண்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டரும் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மணிகொண்டா புப்பலகுடாவில் உள்ள கோல்டன் ஓரியல் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் திடீரென ஒரு வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் தீ மற்ற இடங்களுக்கு பரவத் தொடங்கியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் வெளியே ஓடி வந்தனர். இந்த சம்பவத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் முற்றிலும் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த பணம், உடைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் என சுமார் ரூ.1 கோடி வரை சொத்துகள் சேதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்தாலும் தீ பிடித்த குடியிருப்பிற்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியாதால் சுமார் ஒரு மணி நேரம் போராடினர். அதன் பிறகு மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்போது நிபந்தனைகளை சரியாக கடைபிடிக்காததால் தீ விபத்து தெரிந்து தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.