×

"வார்த்தைகளை அளந்து பேசுங்கள், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்" - அதிமுக அமைச்சர்களுக்கு பாஜக எச்சரிக்கை..  

 

"வார்த்தைகளை அளந்து பேசுங்கள், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்" என அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வார்த்தை தாக்குதல்களுக்கு  பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்  கே. அண்ணாமலை ex.ஐபிஎஸ் அவர்கள் தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்த உடன் மிகவும் பயந்தது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான். அவரது வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டார்கள். அவ்வப்போது அவரை குறை சொல்லி பேசுவதும் விமர்சிப்பதும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இன்றைய நிர்வாகிகளுக்கும் பொழுதுபோக்காக இருந்தது.

பாஜக-அண்ணா திமுக கூட்டணி இருக்குமா இல்லையா என்பதை ஒருபோதும் பாஜக பேசாத போதும், ஏதோ பாஜக அண்ணா திமுக தான் எங்களுக்கு வேண்டும் என்று அழுது அடம் பிடித்ததை போல இவர்களே கதவுகளை மூடி விட்டோம், ஜன்னல்களை மூடிவிட்டோம், நாங்கள் பிஜேபியை விட்டு ஓடி விட்டோம் என்று கதை அளந்து கொண்டிருந்தார்கள். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சாதனை படைத்த அண்ணாமலை அவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமை ஏற்று அமைத்து தமிழகத்தில் ஒரு சாதனை படைத்து விட்டார். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 80 லட்சம் வாக்குகளும் பாஜகவிற்கு மட்டும் 50 லட்சம் வாக்குகளும் கிடைத்தது. ஏறத்தாழ 7300 பூத்துகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் திமுகவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றார்கள் 12 நாடாளுமன்ற தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார்கள். 

பல்வேறு தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு டெபாசிட் பறிபோனதை நாம் பார்த்தோம். இவையெல்லாம் தமிழக பாஜக எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இவற்றையெல்லாம் உற்று நோக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை விமர்சிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஏதாவது ஒரு பத்திரிகையாளர் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு தவறான தகவலை முரண்பட்ட தகவலை அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய தகவலை தொடர்ந்து பேசி வந்தார்கள். இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லாமல் வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையில் எங்கள் கட்சியில்லை.
 
எங்கள் மாநிலத் தலைவர் அவர்கள், மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர் உழைக்கக்கூடியவர், ஆற்றல் மிக்கவர் அப்படிப்பட்டவரை விமர்சிக்கிற பொழுது அதற்கு பதில் சொல்லாமல் அவர் கடந்து போக முடியாது. அப்படி பதில் சொல்கிற போது இவர்களுக்கு எல்லாம் வயிற்று எரிச்சல் ஏற்படுகிறது. இவர்களுடைய மனங்களில் பதட்டம் ஏற்படுகிறது. ஏற்கனவே நான்காக சிதறி இருக்கக்கூடிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புரட்சித்தலைவர். புரட்சித்தலைவி, போன்ற தலைவர்கள் இல்லாத நிலையில் தொண்டர்கள் பரிதவித்து வருகிறார்கள். 

எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இவற்றின் வெளிப்பாடு தான் எங்கள் தலைவரை தொடர்ந்து விமர்சிக்கிறார்கள் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.. இன்றைக்கு உதயகுமார், கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு. முனுசாமி போன்றவர்கள் எல்லாம் வாய்க்கு வந்தபடி, மனசுக்கு வந்தபடி பேசுகிறார்கள். வசை பாடுகிறார்கள். இதன் மூலம் நாங்களும் அரசியலில் இருக்கிறோம் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பதை காட்டுவதற்காகவே அவர்கள் முயற்சிக்கிறார்கள், இது அவர்களுடைய இயலாமையை தான் காட்டுகிறது.

எங்கள் தலைவர் சொன்னது போல வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நான்காவது இடத்தை இப்பொழுதே ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து பேசுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க தயாராக இல்லை. உங்கள் மீது இருக்கக்கூடிய ஊழல் வழக்குகளை ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்திலே அடுக்குவோம். உங்கள் மீது இருக்கிற வழக்குகள் விரைவுப்படுத்துவதற்கு நீதிமன்றங்களை நாடுவோம். உங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை நாட்டு மக்களுக்கு கொண்டு வருவோம். ஏதோ உங்கள் விமர்சனங்களுக்கு எல்லாம் பயந்து அரசியல் செய்யாமல் இருந்து விடுவோம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். 

நீங்கள் தமிழக அரசியலில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அண்ணா திமுகவில் எழுச்சிமிக்க தலைவர்கள் இல்லை என்று அதிமுக தொண்டர்கள் மனம் நொந்து போய் இருக்கிறார்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களை தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்டு ஒரு தலைவர் "அம்மா" என்று குறிப்பிட்டு பேசுகிறார் என்று சொன்னால் அது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான். அவர் மீது காட்டிய உண்மையான அன்பும் பாசமும் அனைவரும் அறிந்ததே. 

அப்படிப்பட்ட பிரதமர் அவர்களை இப்பொழுது விமர்சிக்கிற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புகழாத நாளே இல்லை. இப்படி சந்தர்ப்பவாத அரசியல் செய்ய முடிவு செய்துவிட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் மன்றத்திலிருந்து தூக்கி எறியப்பட போவது உறுதி. பதிலுக்கு பதில் நீங்கள் பேசுவதற்கு திரும்ப பதில் சொல்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நீங்கள் என்னதான் கூறினாலும் கூச்சல் போட்டாலும் உங்களால் இனிமேல் வெற்றி பெறவே முடியாது. மக்கள் உங்களை புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தன்மானத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் 2026 தேர்தலை சந்திக்கத்தான் போகிறோம். அதற்கு முன்பாக வருகிற உள்ளாட்சி தேர்தல்களையும் சந்திக்க தான் போகிறோம். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான நோக்கம். லட்சியங்களை செயல்படுத்தக்கூடிய இயக்கம் பாரதிய ஜனதா கட்சி தான் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். 

எனவே வழக்கு, நீதிமன்றம், செயற்குழு பொதுக்குழு இவையெல்லாம் தற்காலிகமாக அவர்கள் பதவியில் அமர்வதற்குத் தான் பயன்படுமே ஒழிய மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒருபோதும் பயன்படப்போவதில்லை. அப்படி ஒரு கனவு இனிமேல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருக்கக் கூடாது. இருக்க முடியாது. வார்த்தைகளை அளந்து பேசுங்கள் நீங்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால் அண்ணாமலை இன்றைக்கு மக்கள் தலைவர். அவரை விமர்சிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் மக்கள் மன்றத்தில் சந்திக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.