×

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே தேர்தலில் மக்களை சந்திக்க முடியும் : கும்பகோணம் எம்எல்ஏ..!

 

கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் மழைக் காலம் தொடங்குவதையொட்டி, முன்னேற்பாடுகள் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக எம்எல்ஏ, அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் கூறியதாவது: மழைக்காலம் தொடங்கியுள்ளதையொட்டி அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு கவனத்துடன், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும். 48 வார்டுகளில் கடந்த 3 ஆண்டுகளில் சில பணிகள் முடிந்துள்ளது. சில பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் ஒன்றரை ஆண்டுகளில் நிறைவடையும். மேலும், நான் கொடுக்க வாக்குறுதிகள் முழுமையாக விரைந்து முடிக்கப்படும் என உறுதி அளிக்கின்றேன்.

பெரும்பாலும் புதைவட சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவது, குடிநீரில் சாக்கடை நீர் கலப்பது, இந்த இரண்டும் எந்த வார்டுகளில் உள்ளது என்பதை கூறினால் உடனடியாக சீரமைக்கப்படும். 48 வார்டுகளில் உள்ள சுமார் 89 கி.மீ. தூரம் சாலைப் பணிகளில் இன்னமும் 33 கி.மீ. பணிகள் மீதம் உள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் சுமார் 6900 மின்விளக்கு கம்பங்கள் 1200 மின் விளக்கு கம்பங்கள் தாராசுரத்திலும் மற்ற பகுதிகளில் நிறைவேற்றப்படவில்லை.

இது தொடர்பாக மாமன்ற உறுப்பினர்கள் என்னிடம் பல குறைகளை கூறியுள்ளார்கள். இவை அனைத்தும் விரைவில் முழுமைப் பெறும். வார்டுகளில் உள்ள பொதுமக்கள், செல்போன் மூலம் என்னிடம் கூறும் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி வளாகத்தில், மாமன்ற உறுப்பினர்களின் கூட்டரங்கம் ரூ.2 கோடி மதிப்பில் 3 ஆயிரம் சதுரடியில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், ரூ.1 கோடி தேவைப்படுவதால், அதற்கான கருத்துரு வழங்கினால், அரசிடமிருந்து அந்தத் தொகை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தக் கட்டுமானப் பணி இன்னமும் 3 மாதத்திற்குள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும். இதேபோல் கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடம் வழங்கினால், அமைத்துத் தருகிறேன் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

எனவே, மாமன்ற உறுப்பினர்கள், அவர்களது வார்டுகளில் உள்ள மக்களுக்கு தேவையான பணிகளை முழுமையாக நிறைவேற்றினால் தான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பொதுமக்களை சந்திப்பதற்கு ஏதுவாக இருக்கும். மேலும், மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் குறைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றித்தர வேண்டும்” என்று எம்எல்ஏ அன்பழகன் கூறியுள்ளார்.

தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் கூறியது, “கும்பகோணம் பகுதியில் புதைவட சாக்கடை நிரம்பிக் கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. மின் கம்பங்களில் மின் விளக்குகள் இல்லாமல் உள்ளது. வளையப்பேட்டை வழியாக வரும் வாய்க்கால் நீர், நிரம்பி அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து விடுகிறது. அதனால் அந்த வாய்க்காலைத் தூர் வார வேண்டும். புதிய பேருந்து நிலையம், ஜான் செல்வராஜ் நகரில் அமைக்கப்பட்ட சாலையின் இருபுறங்களிலும் பள்ளமாக இருப்பதால், மழை நீர் தேங்கி வடியாமல் உள்ளதால், அந்த நீர் வடிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பல இடங்களிலில சாலைகளை ஆக்கிரமித்து அமைத்துள்ள கடைகள், வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும். கும்பகோணம் மாநகர் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டும் என பல்வேறு குறைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கி பேசினர்.

பின்னர் எம்எல்ஏ கூறியது, ”மாமன்ற உறுப்பினர்கள் கூறும் குறைகள் பல மாதங்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளதாகக் கூறுகிறார்கள். இத்தனை நாள் அதிகாரிகள், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாதது ஏன் என பதில் கூற வேண்டும். இனிவரும் காலங்களில் அதிகாரிகள், அந்தந்த மாமன்ற உறுப்பினர்களை, அழைத்துக் கொண்டு சென்று, பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஆணையர் இரா.லட்சுமணன், “மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை அனைத்து விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாடுகளை பிடிக்க விரைவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அலுவலர்களை நியமித்து, அவர்கள் மூலம் பிடிக்கப்பட்டு, அதன்பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் அய்யப்பன், ”கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கப்படுமா எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த எம்எல்ஏ, இதை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என ஆறுதலாகப் பதிலளித்தார்.