முதல்வருடன் சந்திப்பு.. நல்ல செய்தி சொன்ன வானதி சீனிவாசன்..
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான நில கையகப்படுத்தும் பணிகளுக்கு மாநில அரசின் சார்பாக விதிக்கப்பட்டிருந்த அனைத்து நிபந்தனைகளையும் நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருப்பதாக, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது தொகுதி தொடர்பன பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுக்களை வழங்கினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி, “கோவையின் வளர்ச்சி மட்டுமல்லாது ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட மக்களின் வளார்ச்சிக்கான கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான மத்திய அரசின் பணிகளுக்கு, மாநில அரசால் தொய்வு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நிலம் கையகப்படுத்துவதற்கு மாநில அரசால் விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் நீக்குவதற்கு முதலமைச்சர் உறுதியளித்தார்.
கோவை மாவட்டத்திற்கான மாஸ்டர் பிளான், ஈரோடு, திருப்பூர் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று, கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கோரிக்கை மனுக்களை முதலமைச்சரிடம் வழங்கியிருக்கிறேன். திமுக - பாஜக உறவு பற்றிய கதைகளுக்குள் செல்ல விரும்பவில்லை. எதிர்க்கட்சியாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் எங்களின் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்” என்றார். மேலும், மத்திய அரசின் பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் நேரடியாக நியமிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டின் பிரதமர் உட்பட அமைச்சர்களில் 99 சதவிகிதம் பேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் எனவும், நாட்டையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் இது போன்ற கேள்விகள் ஏற்புடையதல்ல எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.