×

மினி பஸ் கவிழ்ந்து விபத்து.. 4 மாணவர்கள் பலி.. 

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரம் நோக்கி தனியார் மினி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் ஏராளமான பள்ளி , கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது காந்திநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறியதில், சாலையோர பள்ளத்தில்  பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் 3 பேரும்,  கல்லூரி மாணவர் ஒருவரும் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பேருந்துக்கு அடியில்  சிக்கியிருந்த மாணவர்களின் உடல்களை ஜேசிபி உதவியுடன் மீட்டனர். மேலும், படுகாயமடைந்த மாணவர்கள் உட்பட 15 பேர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. பேருந்தில் அதிகளவு பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.  இந்த விபத்தினால் ஆவேசமடைந்த பகுதி மக்கள் அவ்வழியாக வந்த அரசு பேருந்து சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.  பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பொதுமக்கள்,  பேருந்தில் அதிக அளவு பயணிகளை ஏற்று செல்வதை தடுக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினர்.