கட்டட விபத்தில் உயிரிழந்த சையத் குலாப் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம் - அமைச்சர் அறிவிப்பு
கட்டட விபத்தில் உயிரிழந்த சையத் குலாப் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965-1977 ஆண்டு வரை 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 60 ஆண்டு நீண்ட கால பயன்பாட்டாலும் தட்ப வெட்ப மாறுப்பாட்டாலும் கட்டடம் சிதலமடைந்த நிலையில் இருந்தது. தொழில் நுட்ப வல்லுநர் குழுக்களை கொண்டு ஆய்வு செய்ததில் இக்கட்டடங்களை அகற்றிவிட்டு மறுகட்டுமானம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில் 20.01.2022 மற்றும் 09.03.2022 ஆகிய நாட்களில் குடியிருப்புகளை காலி செய்ய வாரியத்தால் அறிவிப்பாணைகள் வழங்கப்பட்டது.