×

சொல்வதை செய்தால் தான் நிதியா? மத்திய அரசுக்கு அன்பில் மகேஷ் கேள்வி 

 

PM SHRI பள்ளிகளை நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்காத தமிழ்நாட்டுக்கு அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. காரணம் “PM SHRI” பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புவதாக மத்திய அரசிடம் 15-03-2024ல் தமிழ்நாடு அரசு உறுதியளித்தது. ஆனால் தற்போது ஒப்புக்கொண்டபடி PM SHRI பள்ளிகளை நிறுவ தமிழக அரசு மறுப்பதாக குற்றம்சாட்டும் மத்திய அரசு அதற்கான நிதியையும் ஒதுக்கவில்லை.

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழக அரசு ரூ.2,120 கோடி கேட்டதற்கு ரூ.870 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. தமிழகத்திற்கான249 கோடி ரூபாய் நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியில் முதல் தவணையாக 573 கோடி ரூபாய் வழங்கவில்லை. ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய நிதி தற்போது வரை வழங்கப்படவில்லை.
 
மாநில உரிமைக்கான கல்வியில் மத்தியரசு கை வைத்துள்ளது. கொள்கை சார்ந்த விவாதத்தை வைத்துக்கொண்டு கல்வி நிதியில் கை வைக்க வேண்டாம். விவாதத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டிய முடிவிற்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுப்பது வேதனை. காலம் காலமாக தமிழகத்தில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சொல்வதை செய்தால் தான் நிதி வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை” எனக் கூறினார்.