×

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டுமென்று ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது- அன்பில் மகேஷ்

 

தமிழகம் புதிய கல்வி கொள்கை ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்து பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தந்தையுமான அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பில் பொய்யாமொழியின் உருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திருச்சி எம்.பி துரை வைகோ மற்றும் திமுக வினர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ரூ.573 கோடி நிதி ஜூன் மாதம் வர வேண்டியது இன்னும் வரவில்லை அந்த நிதியை முறையாக ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டு எம்பிக்கள் வலியுறுத்தினார்கள். தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கடிதங்களும் அவர்களுக்கு எழுதினோம். அதற்கு உரிய பதில் அவர்களிடம் இருந்து வரவில்லை. ரூ.573 கோடி மட்டுமல்ல கடந்தாண்டு தமிழக பள்ளி கல்வி துறைக்கு வரவேண்டிய கடைசி தவணையான ரூ.249 கோடியையும் அவர்கள் வழங்கவில்லை.

புதிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே நிதி வழங்குவோம் என கூறுகிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்பது 2020 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது ஆனால் அனைவருக்கும் கல்வி திட்டம் 2018 ஆம் ஆண்டு உள்ளது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் நிதி ஒதுக்கப்படுகிறது எனவே அந்த நிதியை முறையாக ஒதுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என ஒன்றிய அரசும் கூறுகிறது ஆனால் ஏதோ காரணம் கூறி அதற்கான நிதியை ஒதுக்க மறுக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு ஏற்றுக்கொண்டால் தான் நிதி கொடுப்போம் எனக் கூறுவது நியாயம் இல்லை.

புதிய கல்விக் கொள்கையில் தமிழகம் இணைந்தே ஆக வேண்டும் என்கிற அழுத்தத்தை ஒன்றிய அரசு தருகிறது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு கூறுகிறது. அதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. அப்படி என்றால் அவர்கள் நம்மை ஊக்குவிக்க தான் வேண்டும். கூடுதலாக பணம் ஒதுக்கி தமிழகத்தின் மாதிரியை மற்ற மாநிலங்களில் செயல்படுத்துவோம் என கூறுவது தான் ஆரோக்கியமாக இருக்கும்

கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அழுத்தத்தை ஏன் தருகிறார்கள் என தான் கேட்கத் தோன்றுகிறது. புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் நிதியை நிறுத்துவது சரியல்ல. ஒன்றிய அரசு முறையாக அந்த நிதியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். அந்த நிதி ஒதுக்கப்படாததால் 15000 ஆசிரியர்களின் ஊதியம் கூட நிறுத்தப்படக்கூடிய நிலை ஏற்படும். மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும் ஆசிரியர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கவும் முதலமைச்சர் உரிய முடிவு எடுப்பார் என்கிறார் நம்பிக்கை இருக்கிறது” என்றார்.