கர்நாடகாவில் மழை பெய்தால் தண்ணீர் தானா வந்துடும்- துரைமுருகன்
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தினமும் ஒரு டி.எம்.சி (வினாடிக்கு 11,500 கன அடி) தண்ணீரை திறந்து விடும்படி காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் ஆணைப்படி தமிழகத்திற்கு திறந்து விடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும், மழை பெய்தால் தண்ணீர் வந்துதான் ஆக வேண்டும். நீண்ட நெடிய காவிரி பிரச்சனையை என்னால் முடிந்த அளவுக்கு கையாண்டு வருகிறேன். நமக்கு இருக்கும் உரிமையை நாம் கேட்கிறோம். கர்நாடகாவிற்கு உள்ள உரிமையை அவர்கள் கேட்கிறார். 8,000 கனஅடி தண்ணீர் தரப்படும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகிறார். கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. மேட்டூர் அணைக்கு தற்போது 4,047 கனஅடி தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி பிரச்சினை தொடர்பாக முதல்வர் என்னிடம் ஆலோசனை நடத்தினார். காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதுவதா என முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்றார்.