துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார் வேண்டாம் என்பார்? - துரைமுருகன்
துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார் வேண்டாம் என்பார்? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி, அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.. அமைச்சராக பொறுப்பேற்று ஒரு ஆண்டுக்கும் மேலான நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், “துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்? இது எல்லோரும் சேர்ந்து கூட்டு முயற்சியால் எடுக்க வேண்டிய முடிவு. இதை எல்லாம் கட்சியின் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர்களிடம் பேசி யாருக்கு துணை முதல்வர் பதவியை தர வேண்டும் என்பதை அவர்தான் முடிவு எடுப்பார். நான் முறையாக கட்சியில் வளர்ந்தவன். கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவன். என்னுடைய தனிப்பட்ட மரியாதையைவிட கட்சியின் நோக்கம், பலத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன். காரணம் என்னுடைய வாழ்க்கையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்திருக்கிறேன்.” என்றார்.