×

அசைவ இராமாயணம் பகீர் கிளப்பும் அமைச்சர் துரைமுருகன்..!

 

 வால்மீகி எழுதிய அசைவ ராமாயணத்தை, சைவ ராமாயணமாக மாற்றியவர் கம்பன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், அசைவம் சாப்பிடும் ராமர், சீதையை சைவம் சாப்பிடுபவர்களாக கம்பன் மாற்றியதாகவும் அவர் கூறினார்.  

சென்னை  கம்பன் கழகம் சார்பில் 50வது ஆண்டு கம்பன் விழா நேற்று ( வெள்ளிக்கிழமை ) தொடங்கி நடைபெற்று வருகிறது. தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்த விழா நடைபெற இருக்கிறது. ‘காலம் தந்த கருவூலம்’ என்கிற கருப்பொருளைக் கொண்டு நடப்பாண்டு கம்பன் விழா நடத்தப்படுகிறது. நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் கம்பன் கழகத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர். துரைமுருகன், “ சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களுக்குப் பின்புதான் அதை எழுதியவர்கள் பெயர் குறிப்பிடப்படும். ஒரு புகழ்பெற்ற காவியத்துக்கு முன்பு அதை எழுதியவரின் பெயர் இடம்பெற்றது கம்பராமாயணம் மட்டும் தான். இதற்கு காரணம் அதன் இலக்கிய நடை. உலகின் புகழ்பெற்ற இலக்கியவாதிகளான மில்டன், ஷேக்ஸ்பியர், ரோமர் உள்ளிட்டோரின் படைப்புகளை விட கம்பர் காவியம்தான் உயர்ந்து நிற்கும். உலக இலக்கியங்களோடு போட்டி போடுகின்ற ஒரு காவியத்தை கம்பர் படைத்துள்ளார்.  

இதனால் தமிழில் 12 நூற்றாண்டுகளாக கம்பர் நிலைத்து வாழ்கிறார். தனது எழுத்தில் அறத்துக்கும் மறத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காட்டும் திறமை கம்பருக்கு மட்டும்தான் உள்ளது. வால்மீகி ராமரை ஒரு வீர மானிடராகவே படைத்தார். ராமர் சீதை அசைவம் சாப்பிடுபவர்களாக படைத்தார்.  ஆனால் கம்பர் அவர்களை சைவம் சாப்பிடுபவர்களாக, முழு சைவ ராமாயணமாக மாற்றிவிட்டார்” என்று கூறினார்.