×

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் சேலம் மாநாடு இருக்கும்- அமைச்சர் கே.என்.நேரு

 

அமைச்சர் உதயநிதி தலைமையில் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ளது, மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இன்று காலை (26-11-2023) கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என். நேரு, “
கலைஞர் அரங்கம் புதுப்பிக்கப்படுவதால் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இந்த ஹோட்டலில் நடைபெற்றது. இரண்டு முக்கியமான முன்னெடுப்புகளுக்காக இந்தக் கூட்டத்தைத் தலைவர் அவர்கள் கூட்டியிருந்தார்கள். நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஆறு மாதங்களுக்கு முன்பே தி.மு.க. சார்பில் தொடங்கிவிட்டோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு மண்டல வாரியாகப் பயிற்சி பாசறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஐந்து மண்டலங்களில் மிகப்பெரிய மாநாடுகளைப் போல இக்கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் - உறுப்பினர்களின் அடுத்த கட்டப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களுக்குச் சொல்லப்பட்டது. தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கக் கூடிய அளவுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று தலைவர் அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள். எங்களது அடுத்த மிக முக்கியமான பணி என்பது - சேலத்தில் நடைபெறக் கூடிய இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்போடும் எழுச்சியோடும் நடத்திக் காட்ட வேண்டும் என்பதாகும். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தலைவர் அவர்கள் கூட்டியதன் மிக முக்கியமான நோக்கமே இதுதான்.

தி.மு.க. மாநாடு நடக்கிறது என்றால் அதனுடைய எழுச்சி என்பது தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருக்கும். அதிலும் குறிப்பாக இது இளைஞரணி மாநாடு. அன்புச் சகோதரர் - மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு ஏராளமான இளைஞர்கள் கழகத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர் செல்லும் ஊர்களில் எல்லாம் புதிய புதிய இளைஞர்கள் கழகத்தை நோக்கி வருகிறார்கள்.

கழக அரசும் இளைஞர்களுக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வருகிறது. இதுவும் இளைஞர்களைத் தி.மு.க. நோக்கி வர வைக்கிறது. இந்த இளைய பட்டாளத்தைக் கட்டுக் கோப்பாகவும் - நம்முடைய திராவிடக் கொள்கை கொண்டவர்களாகவும் ஆக்குவதற்காகத்தான் இளைஞரணி மாநாட்டை நடத்த வேண்டும் என்று தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்கள். இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் – அன்றைய இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது 2007-ஆம் ஆண்டு இளைஞரணியின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் - நடைபெற்றது. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இது ஒருநாள் மாநாடாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இளைஞரணிச் செயலாளர் - மாண்புமிகு உதயநிதி அவர்கள் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நான் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறேன்.

காலை 9 மணி அளவில் கழகத்தின் இருவண்ணக் கொடியை மகளிரணிச் செயலாளர் – திருமதி. கனிமொழி எம்.பி. அவர்கள் ஏற்றி வைக்கிறார்கள். மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள் மாநாட்டைத் திறந்து வைக்க உள்ளார்கள். முக்கியப் பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள். தலைவர் அவர்கள் மாலை 6 மணிக்கு சிறப்புரை ஆற்றுகிறார்கள். இந்த இளைஞரணி மாநாடு கழக வரலாற்றில் மட்டுமல்ல - தமிழ்நாடு வரலாற்றிலும் - இந்திய வரலாற்றிலும் முக்கியமான மாநாடாக அமையப் போகிறது. அடுத்து வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குச் சேலம் மாநாடு அடித்தளம் அமைக்கும் மாநாடாக அமையப் போகிறது.

கிட்டத்தட்ட 5 லட்சம் கழகத் தோழர்கள் – இளைஞரணித் தோழர்கள் வருவார்கள் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். இவர்களுக்கு எழுச்சியும் உணர்ச்சியும் ஊட்டும் மாநாடாக இது அமையப் போகிறது. அனைவரையும் மாநாட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பதைப் போல ஊடகங்களைச் சேர்ந்த உங்களையும் அழைக்கிறேன்” என்றார்.