எம்.ஜி.ஆரை விட மு.க.ஸ்டாலினுக்கு தான் பெண்களின் ஆதரவு இருக்கிறது- கே.என்.நேரு
எம்.ஜி.ஆரை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் பெண்களின் ஆதரவு இருக்கிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ரூ. 18.44 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.46.25 கோடி மதிப்பீட்டில், பல்வேறு துறைகளின் சார்பில், 1,576 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில், மாநகராட்சி மேயர் அன்பழகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்து வருகிறார். பல தொழிற்சாலைகளையும் உருவாக்கி வருகிறார். அதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் அனைவரும் "நீங்கள்தான் அடுத்த முதல்வர்" என்று பெண்கள் கூறுகிறார்கள். அதேபோன்று, "முதலமைச்சரே உங்களது அனைத்து திட்டங்களும் நல்லா இருக்கு.. உங்க உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.." என்று தாய்மார்களும் கூறுகிறார்கள். அதேபோன்று முதல்வருடன் நின்று புகைப்படம் எடுத்துகொள்ள பள்ளி, கல்லூரி மாணவிகள் போட்டி போடுவதையும் பார்க்க முடிகிறது. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில், தமிழ்நாட்டில் மகளிர் ஆதரவு அதிகமாக இருந்தது என்று சொல்வார்கள். ஆனால் இன்று எம்ஜிஆரையும் தாண்டி, அதிகளவுக்கு தமிழக முதல்வருக்கு ஆதரவு பெருகி இருக்கிறது என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கான நல்ல ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார்” என்று பேசினார்.