சீமான் அப்டேட் இல்லாத அரசியல்வாதி- அமைச்சர் மா.சு.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்டேட் இல்லாத அரசியல்வாதி என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “13 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டுகிறார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராய் இருப்பது வருத்தமளிக்கிறது. அப்டேட் அரசியல்வாதி என நினைத்துக் கொண்டிருந்தவர்கள், காலாவதி அரசியல்வாதியாக மாறி உள்ளனர்.
ஆட்சிக்கு வந்த பின் சுகாதாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிறுமி இறந்ததாக ஈபிஎஸ் குற்றம்சாட்டுகிறார். டெங்கு கட்டுப்படுத்தப்பட்டது பற்றி தெரியாமலேயே ஈபிஎஸ் அறிக்கை விட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாம்பு கடி, நாய் கடிக்கு சுகாதாரத்துறை மூலம் மருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன. எத்தனை பேரை அழைத்து வந்தாலும் ஆய்வுக்கு நான் தயார். இடத்தை நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள்” என சவால் விடுத்துள்ளார்.