×

இனி மருத்துவமனை பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

 

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலில் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் காயம் ஏற்பட்டது. மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும், மருத்துவர் பாலாஜியை இன்று (நவ.14) காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

புதன்கிழமையன்று 11 அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளடக்கியிருக்கும் சங்கங்களுடான கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. நடைபெற்ற சம்பவம் குறித்து பெரிய அளவிலான வருத்தம் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அந்த வகையில் அவர்களும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு திருப்தி தெரிவித்தார்கள். அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும் மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி தமிழகம் முழுவதும் மருத்துவச் சேவை பாதிக்கப்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இன்று காலை முதல் நான் தொலைபேசியில் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் கவன ஈர்ப்பாக நடந்த நிகழ்வினை பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வகையில் அடையாளமாக ஒருசில நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே தவிர மருத்துவ சேவை பாதிப்புகள் எங்கும் இல்லை. இதற்காக அனைத்து அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் துறையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனும் மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து நான் பேசவுள்ளேன். பின்னர் அனைத்து மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகளுடனான கூட்டமும் நடத்தப்படவுள்ளது. மருத்துவர்களின் கோரிக்கைகளுள் ஒன்றான மெட்டல் டிடெக்டர் அனைத்து மருத்துவமனைகளிலும் அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்கள். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்கு ஒரு சில இடங்களில் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது, மிக விரைவில் எந்த மருத்துவமனை என்று அறிவிக்கப்படும்.

தற்போதைய காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் சேவை பெற வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2021-க்கு முன்னர் 6,500 பேர் புறநோயாளிகளின் எண்ணிக்கை இருந்தது என்பது தற்போது 12,000 நபர்களாக உயர்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 2021-க்கு முன்னர் 3,000 பேர் வந்திருந்தனர், தற்போது 4,500 பேர் புறநோயாளிகளாக வருகின்றனர்.

கடந்த அக்.8-ம் தேதி முதல், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 நிறங்களைக் கொண்ட கையில் கட்டிக்கொள்ளும் வகையில் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இந்த நடைமுறை படிப்படியாக 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும், 320 வட்டார அரசு மருத்துவமனைகளிலும், அடையாள அட்டை நோயாளர்களின் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுவது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற நிலையே உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள்ளாகவே புறநோயாளிகள் சேவை முடிக்க வேண்டும். எனவே, இதுபோன்ற இடங்களில் மெட்டல் டிடெக்டர் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ஒரு சில இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நோய் பாதிப்புகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு முன்னாள் தனியார் மருத்துவ சேவையினை பயன்படுத்தி வந்தவர்கள் தற்போது அரசு மருத்துவ சேவையின் மீது நம்பிக்கை கொண்டு விரும்பி பயன்படுத்த தொடங்கியுள்ளதால் தான் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகளின் சேவை அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே கட்டண படுக்கை வசதிகள் இருந்தது. ஆனால், தற்போது 15-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் நடுத்தரவர்க மக்களும் பயன்படுத்தும் வகையில் தனியரை வசதியுடன் கட்டண படுக்கை தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மருத்துவமனைகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் நவ.17 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைக்கவுள்ளேன். ஏற்கனவே சேலம், கோவை, மதுரை போன்ற இடங்களில் தொடங்கி வைத்துள்ளேன். இதுபோன்று அரசு மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தி வருவதால் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.