ஆவின் நெய் விலை உயர்வு குறித்து பேச அண்ணாமலைக்கு உரிமை இல்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்
தனியார் நெய் விலையை விட ஆவின் நெய் விலைக்குறைவாக விற்கப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “தனியார் நெய் விலையை விட ஆவின் நெய் விலைக்குறைவாக விற்கப்படுகிறது. வெளிச்சந்தைகளில் தனியார் நெய் லிட்டருக்கு ரூ. 960 முதல் ரூ. 1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் நெய் விலை உயர்வு குறித்து அண்ணாமலை பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு இது புதிது அல்ல. சாதாரணமாக பொதுவெளியில் அரசியல் தலைவர்கள் பேசும்போது, சில ஒழுக்க நெறிமுறைகளை கடைப்பிடிப்பதுண்டு. உண்மைக்கு மாறாக பொய்யான தகவல்களை, வாய்க்கு வந்தபடி பொறுப்பான தலைவர்கள் பேசுவது கிடையாது, அது ஒழுக்கநெறி. இதுபோன்று ஒழுக்கநெறியை பாஜக தலைவர் எப்போதாவது கடைப்பிடித்தது உண்டா?
அண்ணா, முத்துராமலிங்கத்தேவர் போன்றோர் இணைக்கமாக இருந்தவர்கள். இப்படிப்பட்ட தலைவர்கள் குறித்து பேசும்போது அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது. பிரதமர் நரேந்திரமோடி மட்டுமல்ல, உலகில் உள்ள பாசிச தலைவர்கள் எல்லாரும், இப்படி தான் மக்களை பயம் காட்டி கட்டுக்குள் வைத்திருப்பார்கள்” என்றார்.
-