×

“5 நாட்களில் பூங்காவின் ஜிப்லைன் பழுது! உயிருக்கு பாதுகாப்பு இல்லை”- ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

 

சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் உள்ள ஜிப்லைன் பழுது ஏற்பட்டது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.


இதுதொடர்பாக தமிழக அரசின் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவருக்கு வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை திமுக அரசு மீட்டு கலைஞர் பூங்காவை உருவாக்கினால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வராது? ஜெயலலிதாவின் ஆரம்பக்கால தோழி லீலா. ஜெயலலிதாவிடம் நெருங்கிப் பேசக்கூடியவர். ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.


போயஸ் கார்டனை சசிகலா ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில், வழக்கம் போலவே போனார் லீலா. ஆனால், அங்கே அவருக்குப் பழைய மரியாதை கிடைக்கவில்லை. தோட்டக்கலை தொடர்பான புத்தகங்களை லீலாவிடம் கேட்டிருந்தார் ஜெயலலிதா. அவற்றை லீலாவும் அனுப்பியிருந்தார். அதுபற்றி எந்தத் தகவலும் வராததால் கார்டனுக்குப் போனார் லீலா. ‘‘மேடம் வரச் சொல்லியிருந்தார்கள்’’ எனச் சொல்லியிருக்கிறார். ‘‘காத்திருங்கள்’’ என பதில் வந்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கார்டன் ரிசப்ஷனில் காத்திருந்தும் அவருக்கு ஜெயலலிதாவைச் சந்திக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை.


கடைசியாக, ‘‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அவர் இன்று யாரையும் பார்க்க மாட்டார். பிறகு வாருங்கள்’’ என சொல்லி அவரை சசிகலா அனுப்பிவிட்டார். ‘‘அவர் தான் என்னை வரச் சொல்லியிருந்தார்’’ என லீலா சொன்னது எடுபடவில்லை. அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவுக்காக காத்திருந்த வலம்புரி ஜான் மட்டும் கிளம்பவில்லை. சசிகலா போன பிறகு தனக்கு வேண்டப்பட்ட லீலாவிடம் ‘‘என்னம்மா ஆச்சு’’ எனக் கேட்டிருக்கிறார் வலம்புரி ஜான். விரக்தியாகச் சிரித்துவிட்டுப் போனார் லீலா. அதன்பிறகு அவரால் கார்டன் பக்கமே தலை வைக்க முடியவில்லை.

''லீலா வந்து போன தகவல் ஜெயலலிதாவிடம் சொல்லிவிட வேண்டாம்'' என வலம்புரி ஜானிடம் கேட்டுக் கொண்டார் சசிகலா. தோட்டக்கலை தொடர்பான புத்தகங்களையும், அவற்றை எழுதிய கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் பிறகு ஜெயலலிதாவுக்கு சசிகலா அறிமுகம் செய்து வைத்தார். ‘தோட்டக்கலை பற்றிய செய்திகளை ஜெயலலிதாவுக்குச் சொல்வதாக இருந்தாலும் தனக்கு வேண்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மட்டுமே சொல்ல வேண்டும். தனக்கு வேண்டப்பட்டவர் மட்டும்தான் ஜெயலலிதாவின் பக்கத்தில் போக முடியும் என சசிகலா போட்ட கணக்கில் காணாமல் போனார் லீலா.

அந்த தோட்டக்கலை கிருஷ்ணமுர்த்தி ஆக்கிரமித்திருந்த 1000 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மீட்டிருக்கிறது. சசிகலாவுக்கு வேண்டப்பட்டவரும் அதிமுக பிரமுகருமான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 1,000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது. நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலத்தை முழுமையாக மீட்டது தமிழ்நாடு அரசு. அடேங்கப்பா.. இத்தனை வருஷ ஆக்கிரமிப்பா என மலைக்க வைக்கும் அந்த ஆக்கிரமிப்பின் கதையை பார்ப்போம்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, கதீட்ரல் சாலையில் தமிழ்நாடு அரசு தோட்டக் கலை துறைக்கு சொந்தமான நிலம் 23 ஏக்கரில் பரந்து விரிந்திருந்தது. அந்த இடத்தை தோட்டக்கலை சங்கத்திற்காக 1910-ம் ஆண்டு அரசு வழங்கியது. காலப்போக்கில் அந்த நிலம் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் கைக்குச் சென்றது. 'விவசாய தோட்டக்கலைச் சங்கம்' என்ற ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தைப் பயன்படுத்தி வந்தார். அந்த இடத்திற்கு பட்டா பெற்று தோட்டக்கலை கிருஷ்ணமுர்த்தி ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார்.

அதிமுக ஆட்சி நடைபெற்ற போது அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1989-ல் கலைஞர் ஆட்சியின் போது 17 ஏக்கர் நிலம் சட்டப்படி மீட்டகப்பட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீதியுள்ள நிலத்தை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த நிலத்தை ஒட்டி உட்லன்ஸ் ட்ரைவ்-இன் ஹோட்டல் இருந்தது. ஒரு காலத்தில் சென்னையின் லேண்ட் மார்க்காக அந்த ஹோட்டல் பிரபலம். காரில் அமர்ந்தபடியே விஐபிகள் எல்லாம் வந்து அந்த ஹோட்டலில் சாப்பிடுவார்கள். அங்கு குத்தகை அடிப்படையில் செயல்பட்ட தனியார் டிரைவ்-இன் உணவு விடுதி வசம் இருந்த நிலத்தை கலைஞர் அரசு மீட்டு, செம்மொழிப் பூங்காவை உருவாக்கியது.

மீதமுள்ள நிலத்துக்கு தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தனிநபர் பட்டா பெற்று அவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்த சட்டப் போராட்டத்தால் மீதியுள்ள 6 ஏக்கர் நிலம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். இந்த இடம் முழுவதுமாக அரசு கையகப்படுத்தி சீல் வைத்துள்ளது. 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 115 கிரவுண்ட் நிலம் சட்டப் போராட்டம் மூலம் மீட்டதோடு ரூ.46 கோடி செலவில் உலகத் தரத்துடன் கலைஞர் பூங்காவாக மாற்றி திறந்து வைத்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

இந்த கோபம்தான் பழனிசாமிக்கு இப்போது ஜிப்லைன் பழுதில் வெளிப்பட்டிருக்கிறது. எதிர்க் கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்ப பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே... என்ற ஆத்திரம்தான் காரணம். எதிர்க் கட்சித் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஜிப் லைன் பழுதடையவில்லை. ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை. மேலும் ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். அவர்கள் சென்ற அந்த இருக்கைக்கு தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக ஒரு பத்து வினாடி அவர்கள் தேங்கினர். பின்னர் அவர்கள் சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு அவர்கள் இறங்குதளம் சென்றடைந்தனர். ஆகவே எதிர்க் கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது. இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே.

இந்த பூங்காவிற்குள் நுழைய பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிப் லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை, இசை நீறூற்று போன்றவை அந்தந்த சேவைக்கேற்ற குறைந்த கட்டணங்களே பெறப்படுகின்றன. பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.