×

மது ஒழிப்பில் திமுகவுக்கு மாறுபட்ட கருத்து இல்லை.. ஆனால் அதை ஒரே நாளில் செய்ய முடியாது- அமைச்சர் முத்துசாமி

 

மதுபழக்கத்தில் இருப்பவர்களை அதில் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுத்த பிறகு, தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என அமைச்சர் முத்துசாமி உறுதிபட  தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் மாநகராட்சி பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சூரம்பட்டி அணையில் ஆகாயத்தாமரையை அகற்றும் பணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய  அவர், “மதுவிலக்கு கொள்கையில் அரசுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் ஒரே தினத்தில் அவற்றை மூட முடியாது. விற்பனை கணக்கை கவனிப்பது அதில் தவறு ஏதும் நடக்கிறதா? வேறு இடத்திற்கு செல்கிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காகத்தான் இது கண்காணிக்கப்படுகிறது. மது கடைகள் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் திமுக அரசின் எண்ணமாக இருக்கிறது. ஒரே நாளில் மூட முடியாது. ஒரு கடையை மூடுவதால் அந்த பகுதியில் இருப்பவர்கள் மது அருந்துவதை நிறுத்தி விட்டார்கள் என்று கூற முடியாது. அவர்கள் மற்ற பகுதிகளுக்கு செல்வார்கள். அவர்களுக்கு கவுன்சிலிங் தரப்பட்டு மது பழக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

திமுக ஆட்சிக்கு வந்த பின் 500 கடைகள் மூடப்பட்டன. மீண்டும் படிப்படியாக குறைப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மதுக்கடைகளை மூடுவது பெரிய விஷயம் இல்லை, ஆனால் மூடிய பின் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் சரி செய்வது குறித்து ஆலோசிக்க வேண்டும். ஒன்றிய அரசு மதுவிலக்கை அகில இந்திய அளவில் கொண்டு வந்தால் அதை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றோம். மூடப்பட வேண்டிய மது கடைகள் குறித்து பட்டியல் தயாரித்து வருகிறோம். மது பழக்கத்தில் உள்ளவர்கள் தவறான இடத்திற்கு சென்று விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களிடம் மதுபழக்கம் ஏற்படாமல் தடுக்க பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என்றார்.