×

இன்ஜினியரிங் கவுன்சிலிங் எப்போது? கட்டணம் உயர்வா?- அமைச்சர் பொன்முடி விளக்கம்

 

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 22-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11- ஆம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறும். 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் கலந்தாய்வு நடத்தப்படும். ஜூலை 22 ,23 ஆகிய தேதிகளில் 7.5%,  மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள்,  விளையாட்டு வீரர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். பொது பிரிவுக்கான கலந்தாய்வு 22ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும். ஆன்லைன் மூலமே பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருக்கிறது. எனவே அதிக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொறியியல் படிப்புக்கான கல்வி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் கல்வி கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 21,946 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பாடங்கள் ஆய்வு செய்யப்பட்டு புதிதாக வளர்ந்து வரும் துறைகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தமிழக மாணவர்களின் கல்வி வழங்கும் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பொறியியல் கல்வித்திறனை அதிகரிக்க இந்த ஆண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் பொரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி நீட்டிப்பு குறித்து ஆளுநரிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.