×

ஆபத்தான சூழ்நிலையில் அதிமுக... அக்கட்சித் தொண்டர்கள் திமுகவிற்கு வர வேண்டும்: அமைச்சர் ரகுபதி

 

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு எதிரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ஊரமைப்பு அலுவலக கட்டடத்தினை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இதில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “மூன்று குற்றவியல் சட்டங்களுக்காக தமிழ்நாடு அரசு ஒரு ஆணையம் அமைத்துள்ளது. அது தமிழ்நாடு அரசு எந்தெந்த திருத்தங்களை கொண்டு வரும் என்பதை பரிந்துரைக்கும். நிச்சயம் தமிழ்நாடு அரசு அதில் கொண்டு வரப்படும். எங்களை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக வழக்கறிஞர்கள் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த மூன்று சட்டங்கள் தேவையில்லாத ஒன்று என்று கருதுகிறார்கள். இதில் ஒன்றிய அரசு கௌரவம் பார்க்காமல் இந்த சட்டத்தை நீக்கி விட்டு பழைய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய சட்டத்தில் ஏதாவது நல்ல கருத்துக்கள் இருந்தால் பழைய சட்டத்திலேயே அதனை சேர்த்து அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை கொண்டு வருகின்ற கட்டாயம் ஏற்படும் போது தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஆணையம் கூறுகின்ற திருத்தங்களை கொண்டு வருவோம். 

எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. இதைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்ல நான் வருத்தப்படுகின்றேன். இன்று அவருடைய இயக்கத்திலேயே கொங்கு மண்டலத்தை சார்ந்தவர்களும் அழுத்தம் தருகிறார்கள். டெல்டா மாவட்டத்தை சார்ந்தவர்களும் அழுத்தம் தருகிறார்கள். இதெல்லாம் செய்திகளாகவே வந்து விட்டன, இதை மற்றவர்கள் மறுப்பதற்கான வாய்ப்பு இல்லை. நான் ஏற்கனவே கூறியதைப் போல் தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஒரு ஆபத்தான சூழ்நிலையை சந்திக்க போகிறது என்றேன். இது தற்போது நடந்து கொண்டிருக்கிறது அதுதான் உண்மை. அதனால் அங்கு இருக்கக்கூடிய உண்மையான தொண்டர்கள் நம்பி திமுகவிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றோம். இங்கு தலைவர் ஸ்டாலின் அரவணைத்து கொள்வார் வழிநடத்துவார் பாதுகாப்பார். இங்கு எல்லோருக்கும் எவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கிறார் என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே திராவிட இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான். ஆபத்தான சூழ்நிலையில் அதிமுக உள்ளது. ஆகவே உண்மையான அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாருங்கள், அதிமுக அழிவது வருத்தம் தான், அதனால் தான் அதிமுக தொண்டர்கள் இங்கு வாருங்கள் என்று கூறுகிறேன். இங்கு வந்தால் தற்போது ஸ்ட்ராங்காக இருப்பவர்கள் டபுள் ஸ்ட்ராங்காக இருப்போம்.

எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவாகி இருக்கிறார் என்பதை அவர் தப்பு செய்துள்ளார் என்ற அர்த்தம் வெளிப்படுகிறது. அவருக்கு தைரியம் இருந்திருந்தால் வெளியே வந்திருக்கலாம். தற்போது அவர் முன் ஜாமின் கேட்டுக் கொண்டு உள்ளார், அது கிடைக்கவில்லை. தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை தேடி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு காவல்துறைக்கு உண்டு. இன்று நாங்கள் அவரைத் தேடிக் கொண்டு இருக்கின்றோம். அவர் எந்த மாநிலத்திற்கு சென்று இருந்தாலும் நிச்சயம் நமது காவல்துறை கண்டுபிடித்து கொண்டு வந்து சட்டத்தின் முன்பு நிறுத்தும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்” என்றார்.