"ஸ்டிக்கர் பாய்ஸ் என பெயர் பெற்றவர்கள் யார்? என நாட்டு மக்களுக்குத் தெரியும்- அமைச்சர் ரகுபதி
நாகப்பட்டினத்தில் செய்தியாளார்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஸ்டிக்கர் ஓட்டும் பணியை திமுக செய்கிறது என அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஸ்டிக்கர் பாய்ஸ் என பெயர் பெற்றவர்கள் யார்? என நாட்டு மக்களுக்குத் தெரியும். அதிமுகவினரை தான் ஸ்டிக்கர் பாய்ஸ் என சொல்வார்கள். 2015ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது தன்னார்வலர்கள், தனியார் அளித்த நிவாரண பொருட்களில் எல்லாம் அதிமுகவின் ஸ்டிக்கரை ஒட்டியவர்களை இந்த நாடு மறக்காது. ஸ்டிக்கர் பாய்ஸ் என்றால் அதிமுக தான் மக்களுக்கு நினைவுக்கு வரும்.
அம்மா சிமெண்ட் எப்போது எடுத்தார்கள் என்பது அண்ணா திமுகவினருக்கே தெரியாது. தரமான நல்ல சிமெண்ட் தரவேண்டும் என்பதற்காக வலிமை சிமெண்ட் என்ற பெயரில் தரப்படுகிறது. அம்மா சிமெண்டை எடப்பாடி பழனிச்சாமி காலத்திலேயே கைவிட்டு விட்டார்கள். வலிமை சிமெண்டை ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிமெண்ட் கிடைப்பதற்காக அரசின் சார்பாக தருகிறோம். அதுவும் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. எங்களுக்கு ஸ்டிக்கர் மாற்றி ஓட்டும் பழக்கமும், ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கமும் இல்லை.
முதலமைச்சர் கொண்டுவந்த எந்த திட்டமாக இருந்தாலும் அது திமுகவின் லேபிள் ஓட்டப்பட்ட திட்டங்களே தவிர, மற்றவர்களை பார்த்து காப்பி அடித்த எந்த திட்டங்களும் கிடையாது. யாரையும் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் சொந்த லேபிளிலேயே முடியும். அதற்கான சக்தி எங்களுக்கு உள்ளது. அம்மா மருந்தகம் வேறு, முதல்வர் மருந்தகம் என்பது வேறு. அம்மா மருந்தகத்தை அதிமுகவினரே ஞாபகம் வைத்திருக்கிறார்களா? தெரியவில்லை.
எபொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், 'முதல்வர் மருந்தகம்' என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று இலட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும், D.Pharm மற்றும் B.Pharm படிப்பு முடித்தவர்களுக்கு சொந்த தொழில் தொடங்கிட வாய்ப்பு அளிக்கும் அற்புதமான திட்டமாகும். மருந்தகங்களுக்குத் தேவையான தரமான மருந்துகள், TNMSC மூலம் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கொள்முதல் செய்யப்படும். குறிப்பாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகள் மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்படும்.
2016 ஆம் ஆண்டு முதல் அன்றைக்கு ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியில் புதிதாகத் தொடங்கப்பட்ட கூட்டுறவு மருந்தங்களுக்கு அம்மா மருந்தகம் எனப் பெயரிடப்பட்டது. இம்மருந்தகங்கள் கூட்டுறவு மருந்தகங்களை போன்றே சங்கங்களால் நடத்தப்பட்டன. தொழில் முனைவோர் ஈடுபடுத்தப்படவில்லை. 380 கூட்டுறவு மருந்தகம் மற்றும் அம்மா மருந்தகம் எண்ணிக்கையில் மட்டுமே மாநிலம் முழுவதும் செயல்படுகின்றன. அம்மா மருந்தகங்களில் குறிப்பிட்ட வகை மருந்துகள் (Branded medicines) மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டமாக இருந்தாலும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை கடந்த மாதம் முதலமைச்சர் நேரில் சென்று திடீரென ஆய்வு நடத்தி அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடித்து வேலையை ஜெயக்குமார் நிறுத்திக் கொள்வார் என நம்புகிறோம்.
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என வீர வசனம் பேசி இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கும் நான்காவது இடத்திற்கும் மக்களால் புறந்தள்ளப்பட்டவர்கள், விக்கிரவாண்டி தேர்தலை கண்டு அஞ்சு ஓடியவர்கள், ஏதோ இன்று தைரியமாக இருக்கிறோம் என்பது போல பேசி உள்ளார். அங்குள்ளவர்கள் கிளம்பி விடக்கூடாது என்பதற்காக ஜெயக்குமாரை கொண்டு எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை தந்திருக்கிறார். அதிமுக கூடாரம் காலி ஆகி வருகிறது என்பதுதான் உண்மை. அங்கிருந்து செல்பவர்களை தடுப்பதற்காகத் தான், 'எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்' எனக் கூறியுள்ளார். தேர்தல் வந்தால் சந்தியுங்கள் உங்கள் நிலைமை என்ன? என்பது நாடறிந்த உண்மை. எப்பொழுது தேர்தல் நடந்தாலும் சந்திக்க தயார் என்று அதிமுக சொல்லும். ஆனால் தேர்தல் நடக்கும் போதெல்லாம் தலை தெறிக்க ஓடிவிடுகிறது. விக்கிரவாண்டி தேர்தலில் ஏதேதோ காரணம் சொல்லி போட்டியிலிருந்து விலகி ஓடினார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் 11 தொகுதிகளில் 3 ஆம் இடம் பிடித்தார்கள். கன்னியாகுமரியில் 4 ஆம் இடம். விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக 5000 வாக்குகள் கூட வாங்கவில்லை. இவர்களா ஆட்சியை பிடிக்க போகிறார்கள்? பாஜக எதைச் சொன்னாலும் அதைச் செய்கிற அடிமைக் கட்சி அதிமுக என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். மத்திய அரசைக் கண்டிப்பதாக தீர்மானம் இயற்றினாலும் பாஜகவின் என்ற பெயரைக் குறிப்பிட தைரியமில்லாத கட்சி அதிமுக. இதை அதிமுகவின் உட்பூசல் இன்னும் ஓயவில்லை. அதனால் அவசர செயற்குழுக் கூட்டம், ஆலோசனை எல்லாம் நடக்கின்றது. மறைப்பதற்காகப் பொத்தாம் பொதுவாகத் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவின் மோடி அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாகத்தான் எடப்பாடியும் அதிமுகவினரும் நடந்துகொண்டு வருகின்றனர். உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசி அரசியல் நாடகம் நடத்தி வருகின்றனர்” என்றார்.