×

திமுக நிர்வாகிகள் மீது வழக்குகள் நிலுவையா? 3 நாட்களுக்குள் விடுவிக்க நடவடிக்கை- ரகுபதி

 

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாநகர திமுக சார்பில் அரிமளம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாநகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக இலக்கிய அணி துணை தலைவருமான கவிதைபித்தன் தன் மீது அரசியல் கால் புணர்ச்சியால் போடப்பட்ட ஒரு வழக்கால் வெளிநாடு பயணம் என்னால் செல்ல முடியவில்லை என்று திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வேதனையுடன் தெரிவித்தார். 

பின்னர் இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “கவிதைபித்தனுக்கு பதில் அளிக்கும் வகையில்  நிச்சயமாக உங்கள் மீது வழக்கு உள்ளது என்று எனக்கு தற்போது தான் தெரியவந்தது. அவரது வெளிநாடு பயணம் தடைப்பட்டதற்கு நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். காவல்துறையினர் இதுபோன்ற வழக்குகள் குறித்து தகவல்கள் தெரிவிக்கும் பொழுது ஒரு சில வழக்குகளை விட்டுவிடுகிறார்கள். நாங்களும் காவல்துறையிடம் முறையாக திமுகவினர் மீது என்ன வழக்குகள் உள்ளது என்பது குறித்து கேட்டு வாங்கி வழக்குகள் தள்ளுபடி செய்வதற்கும் அறிவிப்பை வெளியிடுகின்றோம். ஆனால் ஒரு சில நேரத்தில் இதுபோன்று நமது கட்சி நிர்வாகிகள் மேல் உள்ள வழக்குகளால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது‌‌. 

நான் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தும் என் மீது கூட மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதுவும் சாதாரண வழக்குகள் தான். காவிரி குண்டாறு பிரச்சனை மற்றும் ரேஷன் கடை வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட போது போடப்பட்ட வழக்குகள். அந்த வழக்குகளிலிருந்து கூட இன்னும் விடுபட முடியவில்லை, கட்சி நிர்வாகி மீது எதிர்க்கட்சிகளால் அரசியல் சார்ந்து போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி ஆகாமல் இருந்தால் உடனடியாக இன்னும் மூன்று நாட்களுக்குள் அது குறித்த தகவலை என்னிடம் வழங்குகள.  ஒரு மாதத்திற்குள் அது போன்ற வழக்குகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வேன். 

தன்னைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் இந்த பொறுப்பு வழங்கி உள்ளது திமுக நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்களுக்கு உதவுவதற்காகவ நான் இந்த பொறுப்பை பயன்படுத்திக் கொள்கின்றேன்‌. காலை முதல் இரவு வரை 500 கிலோமீட்டர் சுற்றுப்பயணம் சென்று வீட்டிற்கு சோர்வாக வரும் பொழுது ஒரு சிலர் தங்கள் கோரிக்கையை கூறும் பொழுது திடீரென அவரிடம் கோபமடையும் சூழ்நிலை உருவாகிறது. எனவே நான் யாரிடமும் எப்பொழுதும் கோபப்பட மாட்டேன். கட்சி நிர்வாகிகள் எப்பொழுதும் என்னை சந்தித்து கோரிக்கை வழங்கினால் உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன்” என்று தெரிவித்தார்.