×

பூரண மதுவிலக்கே எங்களது லட்சியம்- அமைச்சர் ரகுபதி

 

பூரண மதுவிலக்கு என்பது எங்களது லட்சியம். படிப்படியாக மது கடைகளை குறைப்பது நிச்சயம் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை அடுத்த அகரப்பட்டி மற்றும் பெருமாள் பட்டி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை இன்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “கடந்த 2016ல் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று நாங்கள் சொன்னோம். அதனால் திருப்பூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள தொழிலாளர்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கூறவில்லை படிப்படியாகத்தான் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறியிருந்தோம். பூரண மதுவிலக்கு என்பது எங்களது லட்சியம், படிப்படியாக மது கடைகளை குறைப்பது நிச்சயம். 500 கடைகளை நாங்கள் குறைத்துள்ளோம். எங்களிடம் வந்து யாரும் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை, கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்  தோழமையோடுதான் பழகுகின்றனர்.

புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றவர்கள் சொல்லக்கூடிய கருத்துக்களை தான் நடிகர் விஜய் மற்ற அரசியல் கட்சிக்கு மாற்றாக எங்கள் கட்சி இருக்கும் என்று கூறுகிறார். எங்களைப் பொறுத்தவரை எங்கள் பாதை எங்களது எங்கள் பயணம் எங்களது இலக்கில் தெளிவாக இருக்கின்றோம். 2026 எங்களது இலக்கு. 234 என்பது லட்சியம் 200 நிச்சயம். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று நாங்களும் தான் கேட்டுள்ளோம். தேர்தல் வாக்குறுதியிலும் கொடுத்துள்ளோம், அதை தேசிய வாரியாக எடுத்தால் தான் சரியாக இருக்கும் என்பதை தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.