×

இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் தான் பொண்களுக்கு பாதுகாப்பு அதிகம்- விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

 

காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பதைப்போல மருத்துவர் ராமதாஸ் எடுத்ததற்கெல்லாம் ஊழல் குற்றச்சாட்டை கூறுவது தான் அவருக்கு கைவந்த கலையாக இருக்கிறது. அதை தவிர அவருக்கு வேலை எதுவும் கிடையாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “தமிழ்நாடு முதலமைச்சர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபர் அல்ல என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பதைப்போல மருத்துவர் ராமதாஸ் எடுத்ததற்கெல்லாம் ஊழல் குற்றச்சாட்டை கூறுவது தான் அவருக்கு கைவந்த கலையாக இருக்கிறது. அதை தவிர அவருக்கு வேலை எதுவும் கிடையாது. தமிழ்நாடு அரசு என்றைக்கும் திறந்த புத்தகம். நாங்கள் எந்தவித தவறும் செய்யவில்லை என்பதை தான் தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளாரே தவிர வேறு எதுவும் இல்லை.

அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பை படித்துப் பார்த்ததற்கு பிறகு அதை பற்றி பேச வேண்டும் நாங்கள் எந்தவிதமான லஞ்சமும் பெறவில்லை என்பதை எங்களால் நிரூபிக்க முடியும். எங்களது பொதுத்துறை நிறுவனங்கள் லஞ்சம் பெற வேண்டிய அவசியம் கிடையாது. எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வேலை கிடையாது, எந்த சாவு நடந்தாலும் அது குறித்து கருத்து கூறுவதும் குற்றச்சாட்டு கூறுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். காவலர்களால் துன்புறுத்தப்பட்டு எந்த ஒரு இறப்பும் எங்களது ஆட்சியில் ஏற்படவில்லை. ஆனால் அவர்களது ஆட்சியில் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது பேசி வருகிறார். அவருக்கு ஞாபகம் மறதி கொஞ்சம் அதிகமாக உள்ளது. தன்னுடைய காலத்தை எண்ணிப் பார்த்துவிட்டு அவர் பேசினால் நன்றாக இருக்கும்.


 

கழுதை தேய்ந்து கட்டெரும்பாக ஆகிவிட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் அதிமுக கூட்டங்களில் சலசலப்பு நடந்துள்ளது. எந்த நேரத்தில் புயல் வந்தாலும் குறிப்பிட்ட அளவிற்கு மழை வந்தால் சமாளிக்க தயாராக இருக்கிறோம். திடீரென்று வானம் பொத்துக்கொண்டு ஊற்றினால் தான் பிரச்சனைகள் வருகின்றதே தவிர குறிப்பிட்ட அளவு மழை வருகின்ற போது எந்த நேரத்திலும் சமாளிப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. போதை பொருளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை உரிய முறையில் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். போதைப் பொருள் நடமாட்டம் எங்கிருந்து வருகிறது என்பதை பார்க்க வேண்டும் குஜராத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் முத்ரா துறைமுகத்திலிருந்து தான் வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டியது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசு கட்டுப்படுத்தாமல் தமிழ்நாடு அரசு மீது பழி போடுவது வீண் குற்றச்சாட்டு எங்களை பொறுத்தவரை எங்களுக்கு தகவல் கிடைப்பது படி அதிக அளவிற்கு போதை பொருட்களை கைப்பற்றி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமாக உள்ளது, மற்ற மாநிலங்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து பதில் சொன்னால் சரியாக இருக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று கூறுவது வேறு, அதிக பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று கூறுவது வேறு. இங்கு பாதுகாப்பே இல்லை என்று கூறுவதற்கும் மற்ற மாநிலங்களில் பாதுகாப்பு இருக்கிறது என்று கூறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது. தவறுகள் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் உரிய சுதந்திரமும் உரிய பாதுகாப்பும் தமிழ்நாட்டில் உள்ளது அது மற்ற மாநிலங்களை பார்த்துவிட்டு வந்தால் தான் தெரியும்” என்றார்.