×

இவை இரண்டுமே பாஜகவுடைய முழு கூட்டணி கட்சிகள்! அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி

 

அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும்தான் பாஜகவுடைய முழு கூட்டணி கட்சிகளாக உள்ளது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து நடைபெற்ற நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வருகை தந்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கையை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும்தான் பாஜகவுடைய முழு கூட்டணி கட்சிகளாக உள்ளது, அந்த இரண்டையும் வைத்து தான் இந்தியாவில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனர். அந்த கூட்டணி கட்சி ஒத்துழைப்போடு அவர்கள் செயல்படுகிறார்கள், ஏதாவது ஒரு பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் அவர்கள் அமைச்சர்கள் அவர்கள் ஆட்கள் மீது இது போன்ற சோதனை நடைபெற்றுள்ளதா? எதிர்க்கட்சிகளை குறிப்பாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை பயமுறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் அவர்கள் கையில் எடுத்துள்ள இரண்டு ஆயுதம் தான் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும்.

மக்களுக்கு தேவையான முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் கையொப்பமிட மறுக்கிறார், மக்கள் விரோத போக்கில் செயல்படுகிறார் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவும் எந்த மசோதாவாக இருந்தாலும் அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளோம். ஏற்கனவே தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில ஆளுநர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த பின்பு ஆளுநரின் செயல்பாடுகளில் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. மாற்றம் இருந்திருந்தால் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பார்” என்று தெரிவித்தார்.