×

அமைச்சர் பதவி கூட வேண்டாம் என்று சொல்லி போராடி ஜாமீன் பெற்றுள்ளார்- ரகுபதி

 

செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது மகிழ்ச்சியான ஒன்று என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது மகிழ்ச்சியான ஒன்று, கடந்த 15 மாதங்களாக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வந்துள்ளார். அவரைப்போல பொறுமையோடு சட்டப் போராட்டம் நடத்தியவரை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு சிறையில் இருந்து கொண்டு அமைச்சர் பதவி கூட வேண்டாம் என்று சொல்லி மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இன்று நிபந்தனை ஜாமின் பெற்றுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. நிச்சயமாக அவர் வழக்குகளில் வெற்றி பெறுவதற்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அமலாக்கத்துறை பதிந்துள்ள வழக்குகள் எக்கச்சக்கமாக உள்ளது ஆனால் அவர்கள் எத்தனை வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்கள், எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள் என்பது மிக மிக குறைவாகத்தான் இருக்கும். வழக்குகள் போடுவது என்பதை ஒரு பாலிஸியாக அமலாக்கத் துறையினர் வைத்துள்ளனரே தவிர இறுதி தீர்ப்புக்கு அவர்கள் செல்வது கிடையாது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் முடிவைப் பொறுத்து உள்ளது. அதை பற்றி கருத்து கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்று தெரிவித்தார்.