×

மே, ஜூன் மாதத்திற்கான பருப்பு, பாமாயிலை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம்- சக்கரபாணி

 

மானிய கோரிக்கை விவாதத்திற்கு உணவுத்துறை  அமைச்சர் சக்கரபாணி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக இதுவரை 1200 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு குண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் வழங்குவோம் என்ற தேர்தல் அறிக்கையை நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து, தற்போது வரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பெறப்பட்ட 2 லட்சத்து 92 ஆயிரத்து 43 விண்ணப்பங்களில் 9,784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு குடும்ப அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ளவற்றை பரிசீலித்து ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என தெரிவித்தார். நகரங்களில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேலும், மற்ற இடங்களில் 800 குடும்ப அட்டைகளுக்கு மேலும் உள்ள நியாய விலை கடைகளை படிப்படியாகப் பிரித்து புதிய கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. கண் கருவிழி மூலமாக சரிபார்ப்பு முறையில் பொது விநியோகத் திட்டம் பொருள்கள் 9182 கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், விரைவில் அனைத்து கடைகளிலும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும் என்றார்.

உணவில் சிறுதானியத்தை சேர்த்துக் கொள்ளும் வகையில் தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முதற்கட்டமாக 2 கிலோ அரிசிக்கு மாற்றாக, இரண்டு கிலோ கேழ்விரகு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 1659 டன் கோழ்விரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என்றும், ஏப்ரல் 1ம் தேதி முதல் தற்போது 1,084 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என்றும், மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க கூறி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், மாநிலத்தில் எரிவாயு இணைப்புகள் அதிகம் உள்ளதால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள். வால்பாறை, நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் மண்ணெணியின் தேவையை கூறி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் மே, ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டு அளவினை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.