‘மோடியே கட்சி மாறிவிட்டார்... அண்ணாமலை இன்னும் அப்டேட் ஆகல’ - அமைச்சர் சிவசங்கர்
பாரதப் பிரதமர் நரேந்திரமோடியே ராமரை விட்டு விட்டு ஜெய் ஜெகநாத் என கூற ஆரம்பித்துவிட்டார். அண்ணாமலை அப்டேட் ஆகட்டும் அதன் பிறகு பார்க்கலாம் என 2026 தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினே ‘ஜெய்ஸ்ரீராம்' சொல்வார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய கருத்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
2015ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் சன்னாசிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற முற்றுகையிடும் போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்ட போது பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இதில் 9 போலீசார் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீசார் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உட்பட 8 பிரிவுகளின் கீழ் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜவகர், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இம்மாத இறுதியில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தொடர்ந்து 2026 தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினே ‘ஜெய்ஸ்ரீராம்' சொல்வார் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே இதுவரை கூறிவந்த ஜெய் ஸ்ரீ ராம் என ராமரை கைவிட்டு கட்சி மாறி ஜெய் ஜெகநாத் என கூற ஆரம்பித்துவிட்டார். எனவே பாஜக தலைவர் அண்ணாமலை அப்டேட் ஆகட்டும் அதன் பிறகு பார்க்கலாம்” என தெரிவித்தார்.