"7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை"- அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் உதயநிதி
மழைநீர் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகளை அமைச்சர்கள் கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்வாரிய,நீர்வளத்துறை, வருவாய்த்துறை, பேரிடர், மேலாண்மைத்துறை, மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை என அதிகாரிகளை அமைச்சர் உதயநிதி கண்டித்தார். மேலும் கீழ்கட்டளை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் பணிகள் எப்போது முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார். 7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.